தோற்று போன மோடி

எவை எல்லாம் நடக்க கூடாது
என்று நினைத்தோமோ
யாவும் நடந்தேறுகிறது
கண்டு கொள்ள கூட யாருமில்லை
ரூபாய் நோட்டை ஒழித்தால்
கள்ள பணம் ஒழியும்
கறுப்பு பணம் ஒழியும்
என்றார்கள்
தோற்றதென்னவோ
அப்பாவி மக்கள் தான்
ஐநூறு ஆயிரம் ரூபாய்களை
அடைத்திருந்த இடங்களை
இரண்டாயிரம் ரூபாய்
ஆக்கிரமித்ததுதான் மிச்சம்
பால் வாங்க தொடங்கி
மருந்து வரையில் உள்ள
அனைத்து தேவைகளுக்கும்
அவஸ்தை பட்டது
சாமானியர்கள் தான்
வங்கி வாசலிலும்
ஏடிஎம் வாசலிலும்
காத்திருப்பவர்கள்
கோடிஸ்வரர்களோ
அரசியல் வாதிகளோ
அதிகாரிகளோ அல்ல
மாதம் முழுதும்
வியர்வை சிந்தி
சொற்ப சம்பளம் வாங்கும்
என் உடன் பிறப்புகள் தான்
பசியோடும்
முதுமையோடும்
நோய்களோடும்
கால் வலிக்க காத்திருந்து
வங்கி வாசலில்
மரணத்தில் விழுந்தவர்களும்
ஏழை உறவுகள் தான்
காலம் காலமாக
சேர்த்து வைத்த பணத்தை
கால் வலிக்க நின்று
மாற்றியவர்களும்
எம் மக்கள் தான்
இவ்வளவு துயரையும்
சந்தோஷமாக ஏற்றுகொண்டோம்
கறுப்பு பணம் ஒழியும்
கள்ள பணம் ஒழியும்
எங்கள் வாழ்வும் ஒளிரும்
என்று ஏக்கத்தோடு
எல்லாமும் பாழாய் போனது தான்
மிச்சம்
கோடி கோடியாய்
புதிய ரூபாய் நோட்டுகள்
பதுக்கியவர்களை பற்றியே
செய்திகள் அதிகம்
துடிதுடித்து போகிறோம்
ஒற்றை நோட்டுக்காய்
கால் வலிக்க காத்திருந்து
காலனிடம் சென்றவர்களின்
ஆத்மாக்கள் கூட
மன்னிக்காது இவர்களை
அவ்வளவும் புது பணம்
யார் தடுப்பது இவர்களை ?
வாசல் வரை சென்று
கொடுக்கின்ற வங்கி
அதிகாரிகளுக்கு
நீங்கள் கொடுப்பது
பணி இடை நீக்கம்
இந்த இடைவெளி போதும்
அவர்களுக்கு
தெளிவாய் திட்டங்கள் தீட்டி
அடுத்த கொள்ளையை அரங்கேற்ற
ஒரு அரசியல் வாதியும்
ஒரு அதிகாரியும்
ஒரு பணக்காரனும்
இல்லையே
கால் கடுக்க காத்திருக்கும்
எங்கள் வரிசையில்
எப்பொழுதுமே ஏமாறுவதும்
ஏமாற்ற படுவதும்
வாடிக்கைதான் எங்களுக்கு
ஆனால் நம்பிக்கை துரோகத்தைதான்
தாங்க முடியவில்லை
எப்படி இவ்வளவு பணம்
அவர்களிடம் சென்றது ?
எந்த வங்கிகளில் மாற்ற பட்டது
இவ்வளவு பணத்தை?
உங்களின் சட்டங்களும்
கட்டுபாடுகளும்
சாமானியர்களுக்கு மட்டும்தானா?
தவறு செய்தவர்கள்
அனைவருக்கும்
மரண தண்டனை
விதிக்க முடியுமா உங்களால்?
இதுவென்ன கொலை குற்றமா
என கேட்பீர்கள்
ஆம் வங்கி வாசலில்
காத்திருந்து இறந்தவர்களை
காவு வாங்கியது
இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் தான்
கையில் காசு இருந்தும்
பசியுடன் இருந்தோமே
இன்றைய துன்பம்
நாளைய வசந்தம்
என்று நினைத்தோமே
சம்பளம் வங்கியில் வந்தும்
வீட்டு வாடகை கொடுக்கவும்
மளிகை பொருட்கள் வாங்கவும்
மருத்துவ செலவுக்கு இல்லாமலும்
தவித்தோமே
ஒரு நாள் கூலி
போனாலும் சரியென்று
விடுமுறை எடுத்து
வங்கி வாசலில் தவமிருந்தோமே
வாரமெல்லாம் உழைத்த
அசதியை அப்பி கொண்டு
ஞாயிற்று கிழமையிலும்
எங்கே பணம் என்று
ஏடிஎம் ஏடிஎமாக
அலைந்தோமே
எல்லாம் மாறும்
என்று பெரு மூச்சு விடுகையில்
மீண்டும் தொடங்கிய
இடத்தில் நிற்கின்றோம்
அதே கருப்பு பணம்
எல்லாம் புத்தம் புது
நோட்டுகளாய்
கருப்பு பண முதலைகளின்
கஜானாக்களில்
எப்பொழுதும் போல்
ஏமாற்றத்துடன்
நாங்கள்
இந்த தோல்வி எங்களுக்கானதல்ல
பாரத பிரதமரே
இது உங்களுக்குமானது
இனியேனும் தண்டியுங்கள்
இல்லையேல்
தோற்று போனதை ஒப்பு கொள்ளுங்கள்
ஏமாறுவதும் ஏமாற்ற படுவடுவதும்
ஒன்றும் புதிதல்ல எங்களுக்கு
எப்பொழுதுமே
எங்கள் வாழ்வு ????????????????
வலிகளுடன்,
ந.சத்யா