கலை, காதல், கிறக்கம், etc

கவிதைக்கு
கருவிதையை - அவள்
கண்விதைத்தது...

காலம் பல
காத்திருக்க - அதுவே
காரணித்தது...

கிளி குந்தும் - மர
கிளை தொட்டு
கிளர்ச்சிக்கொள்ளும் மரவேர்...

கீச்சுக்குரலழகே - என்
கீடமணியவள்
கீர்த்தனமாம், மறவேன்...

குழல் சிந்தும் குயிலோசை,
குழவியோ இவள் குமரியோ - என
குழப்பும் சிவ(ப்பு)சிரிப்பு...

கூட்டாஞ்சோறு கால
கூட்டாளியே மனைவியாக - மனம்
கூத்தாடும் ஆர்ப்பரிப்பு...

கெட்டிமேளங்கொட்டி
கெழுமுதல்கொள்ள
கெடாரம் சுற்ற காத்திருக்க...

கேள்விக்கணை தொடுத்து - காதல்
கேடயம் தகர்க்கும்
கேளிக்கை ஏனோ?...

கைவிரல் இடுக்கில் - எனை
கைதாக்கி கொண்ட
கைகாரியே!!! - நின்

கொடியிடை கண்டு
கொற்றனென் நெஞ்சும்
கொந்தளிக்கலானதோ!

கோவையிதழ் கொண்ட பாவை
கோபத்தினும் மோகமூட்டும்
கோடியழகு !!!

எழுதியவர் : மணிகண்டன் (21-Dec-16, 11:51 am)
பார்வை : 169

மேலே