பச்சை வானம்

அடர் பச்சை பட்டுடுத்தி
ஆம்பல் மலர் ஏந்தி
மென்பாதம் புற்களில் பதிய
அடியெடுத்து வைத்தேன்
பிரபஞ்சத்தின் இருளில் புதைந்த
சிறிய ஒளிச்சிதறலில்!

வியப்பில் ஆழ்ந்த
பழுப்பு விழிகளில்
பசுமை படர்ந்தது!

வஞ்சி மணம்
வீசி செல்ல
பச்சை கிளிகள்
கூட்டின் கீழே
கண்ணயர்ந்து
தலை சாய்த்தேன்!

பாய்போல் மிதந்து வந்த
பச்சை வண்ணம்
சுழலாய் வேகம் எடுத்து
அருகிருந்த
கோடி மரங்களை
வேரோடு சாய்த்த நொடி

திடுக்கிட்டு
துயில் கலைந்து
இமை பிரித்தேன் !

மரகத பச்சையாய்
கூர் தீட்டிய
என் பார்வை கண்டு
பதட்டத்தில்
அலைபாய்ந்தன
மான்களும் முயல்களும்!

அரச மர இலைகள்
காம்பை விட்டகன்று
அலையலையாய்
வான் நோக்கி
அணிவகுத்தன!

நீல வானில்
பச்சை சாயம் பூசி
மேகங்களினூடே
அரியணை ஏறினாள்
பேரரசி
கார்க்கூந்தலில்
மரகதம் மினுங்க!

எழுதியவர் : மது (23-Dec-16, 5:57 pm)
Tanglish : pachchai vaanam
பார்வை : 184

மேலே