விதி செய்யும் மாயம்

சிறகொடிந்தப் பறவை செயலிழந்து நிற்கிறாள்...
உறவுகள் தொலைத்து உள்ளம் துடிக்கிறாள்...
மனம் கொத்தும் மங்களப் பறவைகள்
மங்கை மனதினைக் கொத்துவதை நிறுத்தவில்லை......


இளவேனிலில் பசுமை இழந்த இயற்கையென
இளமயில் இதழ்களின் சிரிப்பை இழக்கின்றாள்...
கார்காலம் முடிந்தப் பிறகும் இவள்
கண்களின் துளிகளால் ஈரம் கசிகின்றாள்......


மேகங்கள் காற்றில் கலைந்து விட்டாலும்
சோகங்களாய்ச் சூழ்ந்து கொண்டே இருக்கின்றது...
நாகங்கள் ஆயிரம் நெஞ்சுக்குள் நுழைந்து
நோகாமல் நஞ்சுகளைத் தினந்தினம் தெளிக்கின்றது......


கோவில் மணியோசை கேட்கும் போதெல்லாம்
சாவில் ஒலிக்கும் ஓசையாய் கேட்கின்றது...
கோலம் போடும் வாசல் போல
கோதையிவள் வாழ்வின் கோலம் ஆனதே......


குரலை இழந்த குயில்கள் போலவே
குலமகள் நெஞ்சம் ஊமை ஆகின்றது...
விதிகள் விரித்த மாய வலையில்
மதிமுகத்தாள் வாழ்க்கை மண்ணுக்குள் புதைகின்றதே

எழுதியவர் : இதயம் விஜய் (24-Dec-16, 7:56 am)
Tanglish : vidhi seiyum maayam
பார்வை : 111

மேலே