ஊடல் உவகை
கண்ணே கரும்பில் வழியும் அமுதே...
காதலே இருதயம் முளைத்தப் பூவிதழே...
நெஞ்சில் படரும் முல்லைக் கொடியில்
கொஞ்சி சிரிக்கும் வெள்ளை மனதே......
மலரின் வாசந்தேடி வந்த மதுகரமே
மன்மதன் தோட்டத்து மாதுளம் கனியில்
மோகன இராகம் பாடி வந்தாயே...
மோகம் கொண்டு மயங்கி விழுந்தாயே......
வான்விட்டு பூமிவரும் குளிர்ந்தத் துளிகளை
மான்களின் தேகத்தில் புள்ளிகளாய் சேர்த்தாயே...
தேனில் நனைந்த காதலின் துளிகளை
ஊனில் ஊற்றி என்னுயிரில் நிறைத்தாயே......
தேடும் மையல் விழிப் பார்வைகள்
ஆடும் மயிலினுள் தையல் போடுதே...
முகில் பூக்கள் ஒன்றாய் சேர்ந்து
துகில் நனைந்து தேகம் நீராடுதே......
மேனியில் தீண்டாது விரல்கள் கோலமிடுதே...
மேல்திசை அந்திவானமாய் முகம் சிவந்ததே...
தடாகம் பூக்காத தங்கத் தாமரை
தாலாட்டும் பாட்டில் காதலிதழ் விரிக்குதே......