எசப்பாட்டு - 08 கறந்த பாலு அப்படியே
எசப்பாட்டு - 8 ..
கறந்த பாலு அப்படியே
சொட்டுத் தண்ணி ஊத்தாம
கடைகளுக்கு கொடுக்கிறியே
பொன்னம்மா - உனக்கு
கோடி புண்ணியம் சேருமடி
பொன்னம்மா
கறந்த பாலு கடைகளுக்கு
கொடுத்துப்புட்டு வருவதற்கு
நேரமாச்சு ஏன் சொல்லு
பொன்னையா - ஏன்
நேரமாச்சு நீ சொல்லு
பொன்னையா
கறந்த பாலு கடைகளுக்கு
கொடுத்துப்புட்டு கடைத்தெருவில்
ஊர்வம்பு பேசினியா
பொன்னையா - நீ
ஊர்வம்பு பேசினியா பொன்னையா
பசியோடு வருவேன்னு
அவிச்சு வெச்ச இட்டிலிக்கு
பூண்டுவெங் காயம்புளி
சட்டினியும் காத்திருக்கு
பொன்னையா - சூடா
காத்திருக்கு உனக்காக பொன்னையா
நடுநடுன்னு நடுங்காம
கிடுகிடுன்னு குளிர்நீரில்
வேகம் குளிச்சு வரவேணும் பொன்னையா - நாம
ரெண்டு பேரும் சாப்பிடலாம் பொன்னையா
நடந்ததொன்னும் தெரியாம
படபடன்னு பேசுறியே
அப்பறமா குளிச்சுக்கறேன்
பொன்னம்மா – நான்
அப்பறமா குளிச்சுக்கறேன்
பொன்னம்மா
இலையப் போட்டு இட்டிலிய
வெச்சுக்கொடு சீக்கிரமா
பிச்சுப்பிச்சுத் தின்னுக்கிட்டே
பொன்னம்மா - நான்
நடந்ததெல்லாம் சொல்லப் போறேன்
பொன்னம்மா
பாலக் கொடுத்து வருகையிலே
பாவி பைக்கு டியூபு வெடிக்க
மெதுவா பைக்க தள்ளி கிட்டே
பொன்னம்மா
தலைய குனிஞ்சு வருகையிலே
தாயம்மா வாசலிலே
மாக்கோலம் போட்டு நடுவே
மாவெலைய வெச்சிருக்கா
பொன்னம்மா
கை நிறைய வளையடிக்கி
தல நிறைய மல்லிகைப்பூ
நெத்தியில ஒரு ரூவா
வட்டத்துல பொட்டு வெச்சு
பொன்னம்மா - வீட்டு
வாசலிலே காத்திருக்கா
தாயம்மா
நல்ல செய்தி ஏதேனும்
இருக்கும் போலத் தோணுதடி
பொன்னம்மா - ஏதோ
நல்ல செய்தி இருக்கும் போல
பொன்னம்மா
எட்டு வருசம் முன்னாலே
தொட்டுத் தாலி கட்டி விட்டு
முதலிரவு முடியாம
ஊரைவிட்டு போனானே
பொன்னையா - அவ
புருசன் திரும்பி வாரானாம்
பொன்னையா
புருசன் விட்டுப் போனாலும்
தனிமையிலே இருந்தாலும்
நெறித்தவறிப் போகாம
தன்மானம் காத்தாளே
தாயம்மா - அவ
புருசனோடு வாழ வேண்டும்
பொன்னம்மா - நீடூழி
புருஷனோடு வாழ வேண்டும்
தாயம்மா
- தர்மராஜன் வெங்கடாச்சலம்
23-12-2016