நீங்காத நினைவுகள்
நீங்காத நினைவுகள்
மனத்தினில் இம்சை படுத்தும் உன் நினைவுகளை,
நெருப்பிலிட்டு பொசுக்கிட துடிக்கின்றேன்..
சாம்பலானாலும் சட்டென்று எனை விட்டு
நீங்கமாட்டேன் என்று அடம்பிடிக்கின்றது.....
குமுறும் மனத்தில் குன்றாய் குவிந்து கிடக்கும்
உன் நினைவுகளின் துகள்கள் பசைபோல்
பிரிக்கவே முடியாத அரணை எழுப்பி,
முழுமையாக என் துயரங்களை சிறைவைத்துவிட்டன.
திருத்தப்பட முடியாத என் கவிதைகள் போல்,
திரும்ப முடியாத தொலைவிற்கு சென்ற உன்னை,
வழியனுப்ப வாசல் வரை வரும் மனோதிடம் எனக்கில்லை.
வலிகளை எனக்கு துணையாக்கி வந்தவிடத்திற்கே சென்றுவிட்டாயே!!
சுகமாய் உள்நுழைந்து ,சோகத்தினை உள்நுழைத்து,
கண்ணீரைப் பரிசளித்து, கடலளவு துயரத்தை,
தனியொருவளாய் தலைமேல் சுமக்கவைத்து,
தாங்கிப்பிடிக்க யாருமில்லாமல் விதி தவிக்கவிட்டதே!!!
தூரமாய் நீ சென்றுவிட்டதால், இப்புவியெனக்கு
பாரமாய் போய்விட்டதை நீ உணர்வாயா...
ஓராயிரம் ஆறுதல் மொழிகள் செவிக்குள் விழுந்தாலும்,
நாராய் கிழிந்த மனத்தினை தேற்ற நாதியில்லையே!!!
ஆக்கம்: மகேஸ்வரி பெரியசாமி
27-12-16