சுந்தன் அளித்த விருந்து

பகவன் புத்தர், மாந்தோப்பில் எழுந்தருளியிருப்பதையறிந்த சுந்தன் விரைந்து வந்து பகவரை வணங்கி அடுத்த நாளைக்குத் தனது இல்லத்தில் உணவு கொள்ளும்படி அழைத்தான். பகவர் அதனை ஏற்றுக்கொண்டார். சுந்தன் பலவித உணவுகளைச் சமைத்ததோடு காட்டுப் பன்றியின் இறைச்சியையும் சமைத்திருந்தான். பகவன் புத்தர், பௌத்த பிக்குகளுடன் சுந்தன் இல்லம் சென்றார். காட்டுப் பன்றியின் இறைச்சியை அன்போடு சமைத்து வைத்திருப்பதை யறிந்த பகவன் புத்தர் அதனைப் பிக்குகளுக்குப் பரிமாறக் கூடாதென்றும் அதைக் கொண்டுபோய் புதைத்துவிட வேண்டும் என்றும், ஆனால், அன்போடு சமக்கப்பட்ட அதைச் சுந்தனுடைய திருப்திக்காகத் ததாகதருக்கு மட்டும் பரிமாறலாம் என்றும் அருளிச் செய்தார். சுந்தன் அவ்வாறே செய்தான்.

காட்டுப்பன்றியின் இறைச்சியை உட்கொண்ட காரணத்தினாலே, அது சமிக்க முடியாத கடின உணவு ஆகையினாலே, பகவருக்கு வயிற்றுக் கடுப்பு உண்டாயிற்று. அதனை அவர் பிறர் அறியாதபடி அடக்கிக்கொண்டு, வழக்கம்போல நன்றி கூறும்பொருட்டுச் சுந்தனுக்கு அறவுரை கூறியபிறகு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டார். ஆனந்தரிடம், "குசிநகரம் செல்வோம்," என்று கூறினார். ஆனந்தர், "அப்படியே," என்று கூறி இருவரும் குசிநகரம் நடந்தனர். பகவன் புத்தருக்கு வயிற்றுக் கடுப்பு அதிகமாயிற்று. பொறுக்கமுடியாத வலி வயிற்றில் ஏற்பட்டது. ஆகவே வழியிலேயே படுத்துக்கொள்ள விரும்பினார். "ஆனந்தா, மரத்தின் கீழே துணியை விரித்துப்போடு," என்றார். ஆனந்தர் மரநிழலில் துணியை விரித்துப் படுக்கை அமைத்தார். பகவன் புத்தர் வலதுபுறமாகச் சாய்ந்து படுத்தார். பிறகு, பகவருக்கு நீர் வேட்கை இருந்தபடியால், ஆனந்தர் ஆற்றுக்குச் சென்று நீரைக் கொண்டுவந்து கொடுக்க அதைப் பருகி விடாய் தீர்த்தார்.

சிறிது நேரம் இளைப்பாறிய பிறகு பகவன் புத்தர் ககுத்த ஆற்றுக்குச் சென்று அதில் நீராடினார். பிறகு, ஆற்றைக் கடந்து மாஞ்சோலையையடைந்து அங்கிருந்து மள்ளர் நாட்டைச் சேர்ந்த குசிநகரத்து உபவர்த்தன வனத்திற்குச் சென்றார். அங்கு இரண்டு சாலமரங்களுக்கு இடையில் துணியை விரிக்கச் சொல்லி வடக்கே தலைவைத்து வலது கைப்புறமாகச் சிங்கம் படுப்பதுபோலப் படுத்தார்.

பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்தால் அவர் திருமேனிக்கு என்னென்ன கடைசிச் சடங்குகள் செய்ய வேண்டும் என்று ஆனந்தர் பகவன் புத்தரைக் கேட்டார். அதற்குப் பகவர், "பிக்குகள் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. இல்லறத்தைச் சேர்ந்த சாவக நோன்பிகள், செய்யவேண்டியவற்றைச் செய்வார்கள்,"என்று கூறினார்.

ததாகதரின் திருமேனியை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆனந்ததேரர் பகவன் புத்தரைக் கேட்டார்.

பகவன் புத்தர் அதற்கு இவ்வாறு விடைகூறினார்: "அரச சக்கரவர்த்திகள் இறந்தால் அவர் உடம்பை எவ்விதமாக அடக்கம் செய்வார்களோ அவ்விதமாகத் ததாகதரின் உடம்பையும் அடக்கம் செய்ய வேண்டும்."

"அரச சக்கரவர்த்தியின் உடம்பை எவ்வாறு அடக்கம் செய்வார்கள்?" என்று ஆனந்ததேரர் கேட்டார்.

"ஆனந்த! அரச சக்கரவர்த்தி இறந்துபோனால் அவருடைய உடம்பைப் புதிய துணியினால் சுற்றி அதன் பிறகு பஞ்சுத் துணியினால் சுற்றி, அதன்மேல் மறுபடியும் புதிய துணியினால் சுற்றி அதன்மேல் பஞ்சுத் துணியைச் சுற்றி அபடியே ஐந்நூறு துணிகளினால் சுற்றிக் கட்டுவார்கள். பிறகு எண்ணெய் இரும்புச் சாடியில் அந்த உடம்பை வைத்து எண்ணெய் இரும்புச் சாடியினால் மூடிவைப்பார்கள். அதற்குப் பிறகு மணமுள்ள விறகுகளைக் கொண்டுவந்து ஈமவிறகு அடுக்கி அதன் மேலே அந்த உடம்பை வைத்துத் தீயிட்டுக் கொளுத்துவார்கள். உடம்பு தீயில் எரிந்த பிறகு எலும்பை எடுத்து வந்து நகரத்தில் நாற்சந்திச் சதுக்கத்திலே வைத்துக் கல்லினால் நினைவுச் சின்னம் கட்டுவார்கள். ஆனந்த! இப்படித்தான் அரச சக்கரவர்த்தியின் உடம்பை அடக்கம் செய்வது வழக்கம்."

"அந்த விதமாகத்தானே ததாகதருடைய உடம்பையும் அடக்கம் செய்யவேண்டும். அங்கு யாரேனும் வந்து தூபம் தீபங்கள் வைத்து பூக்களைத் தூவி வணங்கினால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் இன்பமும் நன்மையும் உண்டாகும்.

"ஆனந்த! கல்லினால் நினைவுச் சின்னம் கட்டி அமைக்கப்பட வேண்டியவர்கள் நான்கு பேர் உள்ளனர். அந்த நால்வர் யார்? ததாகதராகிய புத்தர்கள், பிரத்தியேக புத்தர்கள், அர்ஹந்தர்கள், அரச சக்கரவர்த்திகள். இந்த நான்கு வகையானவர்களுக்குச் சேதியங்கள் அமைக்கப்பட வேண்டும்," என்று பகவன் புத்தர் கூறினார்.

கடைசி இரவு

பகவன் புத்தர், பிறகு ஆனந்தரை அழைத்துக் குசிநகரத்துக்குச் சென்று அந்நகரத்து மள்ளர்களுக்குத் தாம் பரிநிர்வாணம் அடையப் போவதைச் சொல்லி வரும்படி அனுப்பினார்: "இன்று இரவு கடையாமத்திலே ததாகதர் பரிநிர்வாணம் அடையப்போகிறார். 'ததாகதர் நமது நாட்டுக்கருகில் வந்து பரிநிர்வாணம் அடைந்தபோது நாம் அவ்விடம் இல்லாமற் போனோமே,' என்று பிறகு நீங்கள் வருந்தவேண்டாம், இச்செய்தியை அறியுங்கள்," என்று நகரத்தாருக்குச் சொல்லிவிட்டு வரும்படி அனுப்பினார்.

ஆனந்ததேரரும் இன்னொரு தேரரும் புறப்பட்டுக் குசிநகரம் சென்றார்கள். அப்போது நகர மண்டபத்திலே மள்ளர்கள் ஏதோ காரணமாகக் கூட்டங்கூடியிருந்தார்கள். அவர்களிடம் சென்று பகவன் கூறிய செய்தியை ஆனந்த தேரர் கூறினார். இதைக் கேட்ட மள்ளர்கள் வருத்தம் அடைந்தனர். இச்செய்தி உடனே நகரமெங்கும் பரவியது. முதியவரும், இளையவரும், பெண்களும், குழந்தைகளும் அழுது புலம்பினார்கள். 'பகவன் புத்தர் இவ்வளவு சீக்கிரத்தில் பரிநிர்வாணம் அடையப்போகிறார்,' என்று கூறித் துன்பம் அடைந்தார்கள். பிறகு மள்ளர்களுள் ஆண்களும் பெண்களும் முதியவரும் குழந்தைகளும் எல்லோரும் உபவர்த்தன வனத்திற்கு வந்தார்கள்.

அப்போது ஆனந்த மகாதேரர் தமக்குள் இவ்வாறு கருதினார்: "மள்ளர்களை ஒவ்வொருவராகப் பகவரைத் தரிசிக்க அனுப்பினால் பொழுது விடிந்துவிடும். ஆகையால் குடும்பம் குடும்பமாக அவர்களை அனுப்புவது நல்லது," என்று எண்ணி, ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வரச்சொல்லிப் பகவன் புத்தரிடம், "இன்ன பெயருள்ள மள்ளர் தமது குடும்பத்துடன் வந்திருக்கிறார்," என்று ஒவ்வொரு குடும்பத்தாரின் பெயரையும் கூறினார். அந்தக் குடும்பத்தார் பகவன் புத்தருக்கு வணக்கம் செய்து சென்றார்கள். இவ்வாறு அவ்விரவு முதல் யாமத்திற்குள் எல்லா மள்ளர் குடும்பத்தாரும் வந்து பகவன் புத்தரை வணங்கித் தங்கள் இல்லம் சென்றார்கள்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (2-Jan-17, 8:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 226

மேலே