இப்பயாவது சிரியாத்தா

குழலூதும் கண்ணன் இல்ல அவன
குடிசையில கண்டதில்ல
நீ பொங்கி வடிக்கையில
அம்மா குழலோச கேட்டிருக்கன்
நாள் முழுக்க கல்லுடைச்சி
அந்த கொஞ்ச காச மிச்சம் வச்சி
நாலு விறகு வாங்கி வந்த
அந்த அடுப்படிய தாங்கி வந்த
அப்பா குடிப்பாரு தினம்
வந்து அடிப்பாரு
கறுத்த உன் தேகமது
சிவத்த சோகம் என்ன
அழுகைய நீ மறைப்ப
எனக்கென நீ சிரிப்ப
உன் புடைச்ச கன்னம் இரண்டும்
என் எண்ணத்துல வாருதம்மா
குடிச்சபடி நித்தம் செத்தான்
குடிசையத்தான் மிச்சம் வச்சான்
நான் பள்ளிக்கூடம் போகையிலே
ஒருநாளு வானம் போனான்
தனியாளா நீ தவிச்ச
பணியாளா சிக்கி புட்ட
வீடுகட்ட கல்சுமந்து
வீதிகாரன் சொல்சுமந்து
அரை வயித்த நீ நிரப்பி
என் வயித்த நிரப்புனியே
கோயிலுல தெய்வமில்ல
கோபுரத்தில் சாமியில்ல
நான் கண்ட சாமி நீதான்
குடிசையில் நிக்குறியே
நீ பட்ட கஷ்டமெல்லாம்
வீணாக போகலயே
நான் படிச்சு வந்துபுட்டன்
வேலை ஒன்னு வாங்கிபுட்டன்
நான் இருக்கன் இனி சுமக்க
கேட்டதெல்லாம் தருவியே
உன்கிட்ட வெகுநாளா காணாத
ஒன்ன கேட்கன்
இப்பயாவது சிரியாத்தா