ஆதி முகத்தின் காலப்பிரதி -கவிதை நூல் ஒரு பார்வை- கவிஜி

நுண்மங்களின் வழியாக உண்மைகளை படர விட்ட பக்கங்களை நான் மறுமுறை புரட்டவே இல்லை. மறுமுறை புரண்டது நான். இவருக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் கவிதையை பிடித்து சுற்றி சுற்றி பார்க்கிறேன். என்னை சிறு பிள்ளையாக்கி விட்டு போய் விட்டிருந்தது இவர் கண்ட கவிதை அல்லது இவரால் காணப் பட்ட விதை. கவிதைக்குள் இருக்கும் கவிதையின் பெரும் சிரிப்பா.... ஒப்பாரியா என்பது சூட்சுமம். ஒப்புக்கொடுத்தல் என்பதில் நிரம்பித் ததும்புகிறது சொற்கள். ஒவ்வொன்றும் ஜதி சொல்லும் தத்தோம் தித்தோம் ததீங்கனத்தோம்.

நின்று நிதானமாக அடித்து ஆடும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் ஒவ்வொரு பக்கத்தில் நிரப்பி இருப்பதில் ஆள் அரவமில்லாத காட்டுக்குள் ஓர் அருவி தானாக விழுவது போல.... இந்த புத்தகம். கோணங்களில் மாறு விதை. காலங்களை மாற்றிய கவிதை.

ஒரு வித நடுக்கத்தோடு கடந்த பக்கம் உண்டு. ஒரு வித பிதற்றலோடு உடைந்த பக்கம் உண்டு. ஆதிமுகத்தின் காலப் பிரதியில் திடும்மென முளைத்து வளர்ந்து முன் நிற்கும் ஒவ்வொரு நானை நானென்றே உணர்ந்தேன். அது அப்படியாகவே வரையப்பட்டிருக்க வேண்டும். வேண்டுதலின் நுண்பகுதி சாளரத் திறவாய் ஆகிருதியற்ற பிறழ்வுகளால் நான் உணர்ந்த தருணம் அது. மிகையாகி வழியலாம். இருந்தும் மிகை இல்லை மொழியலாம். எதிரே குறுக்கே நீளவாக்கில் பக்கவாட்டில் முன்னே பின்னே இப்படி தன்னை சுற்றியே கவிதை எடுத்து விடும் இயல்புத் தன்மையில்..... இளைப்பாற மனமில்லை. சற்றேறக் குறை வாளோடு நிற்கிறேன்... கொஞ்சம் கொய்து விட்டு போக. அல்லது வாளோடு வீர வணக்கம் செலுத்தி வாழ்த்து பெய்து விட்டு போக.

கதை புத்தகத்தின்
பக்கத்தில்
புலி துரத்திக் கொண்டோடும்
மானுக்குக்
கூடுதலாக இரண்டு
கால்கள்
வரைகிறது குழந்தை

இந்தக் கவிதையை படித்து விட்டு சில நொடிகள் புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்... சட்டென தோன்றியது.. இந்த கவிதைக்காரருக்கு கூடுதலாக இரண்டு கைகள் இருந்தால் நலம் என்று. அத்தனை ஆச்சரியம். அத்தனை கவிதைகளும். இனி எத்தனை இருந்தாலும். பொதுவாகவே பாராட்டுதலின் கஞ்சன் நான். மனம் வந்து பாராட்ட ஒரு போதும் முயலுவதே இல்லை. 'தூப்புக்காரி"க்கு பின் இந்த புத்தகம் என்னை எழுத வைத்திருக்கிறது. பாராட்டு என்பதைத் தாண்டி ஒரு வித போட்டியோடு தான் மீண்டும் ஒருமுறை படித்தேன். கண்டிப்பாக பூபாலன் காணும் உலகை இன்னொருவர் பார்க்க முடியாது. அதில்..ஒளித்து வைத்திருக்கும் ஒரு துண்டு வாழ்வில் அவரே நிரம்பி இருக்கிறார். அழகியல் என்னவெனில் வேண்டுமென்றால் நம்மையும் நுழைய விடுகிறார்.

எல்லா கடவுளும் விழித்திருக்கும் ஊரில்தான் ஒரு சிறுமி வன்கலவிக்கு ஆளாகி கொல்லப் படுகிறாள். திக்கென கத்தியை கவிதையாக்கி குரல்வளையில் வைத்து அழுத்தி விட்டு நேர் கொண்ட கண்களால் கண்ணாடியை சரி செய்து கொள்ளும் இந்த கவிதைக்காரருக்கு கோபம் கூட மிக நிதானமாகவே வருகிறது. 'இப்போது அறுக்கலாம் அவன் குரல்வளையை" என்று கொல்லப் போகிறவனிடம் அழுத்தமாக தன் நியாயத்தை முன் வைக்கும் பாங்கில்... சற்று மிரளத்தான் வேண்டி இருக்கிறது. கோபம் என்பது கோபத்தையும் தாண்டியது என்பதை புரியும் போது ஆதிமுகத்தின் எதிர்ப்பும் எதிர் திசையின் சரியும்... காலம் தாண்டினாலும் உண்மைக்கே உலகம் என்பதை உரித்தாக்குகிறது.

இன்றைய நவீனத்துவத்தை பேச்சுவாக்கில் புரிய வைத்து விட்டு போகும் சொற் பிரயோகங்கள் முகம் மலரச் செய்யும்...'எப்படி' என்ற கேள்வியோடு.. தானாக புன்னகைக்கவும் வைக்கிறது. நீட்டி முழக்கி சொல்ல வேண்டிய இடத்திலும் சரியான சொல்லை கச்சிதமாக்கிக் கொண்டு அடைத்து விட்டு செல்லும் மொழி நடை... பூக்களின் தேசத்து பறவையின் சிறகடிப்பு. உடைந்து போன பின்னும் புன்னகை தான் ஞாபகத்தில் இருக்கிறது. குமிழ்கள் அல்ல என்று மாற்றுகிறேன். அத்தனை நெருக்கத்தில் இந்தக் கவிதையை பார்க்க முடிகிறது. படிக்கும் போது குமிழாகவோ.. குமிழ் உடைப்பவனாகவோ.. அல்லது எழுதுபவனாகவோ மாற முடிகிறது. என்ன ஆச்சரியம் என்றால் படிப்பவனாகவும்.

வெள்ளிக்கிழமை சாயங்கால மகளை நானும் கூட தூக்கிக் கொஞ்சுகிறேன். திங்கள் கிழமை காலையில் கவிதை புத்தகத்தோடு என் அறை ஒடுங்கி கிடக்கிறது. அது சிந்திக்கிறது. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் சிதறுகிறது. பின் சிறகு பொருத்தி சாளரம் திறந்து விடுகிறது. அத்தனை இலகுவாக ஒரு பறவையாக்கி விடுகிறது இக் கவிதைகள். வியந்து நின்று வீதிகளில் இனி மனிதர்களை கவனிக்க வேண்டும் என்று உணர்கிறேன்.

பிங்க் நிறம் ஹா ஹ்ஹா.. ஹா.... புரியாதோர் புத்தகம் படிக்கட்டும்.

வைகறைக்கு சமர்ப்பித்த பாங்கு உன்னதம். அதில்... காற்றோடு கலந்திருக்கிறது ஆன்மா. அட்டைப்படத்தில் ஆகச் சிறந்த தத்துவத்தை அச்சாக்கி இருப்பது நுட்ப வேலைப்பாடு. அனாமிகாவின் அரைப் பக்கம் ஆகாசம் திறக்கும் முன்பான அன்பான ஆசுவாசம். புத்தகம் கொண்டு வந்து சேர்த்த எங்கள் அபி சாரின் கைகளுக்கு இன்னும் சில குலுக்கல்கள். இரண்டாவது முறை படிக்கையில் மூன்றாம் முறை உயிர்த்தெழுகிறது கவிதைகள். மங்கலான ஒளியில் கொம்புகள். ஆனால் வட்டமென தீட்சண்யம். சுவாசித்துக் கிடைக்கும் நிஜத்தில் கணமென கனமென காகிதப் பூக்கள். பறிக்க மனமில்லை. பார்க்கிறேன். எப்போதும் போல பறக்கிறேன்.

வாழ்த்துக்கள் தோழர்.

மனம் நிறைய உம் எழுத்துக்கள். இந்த இரவை நான் கடந்தாக வேண்டும் இதன் தாக்கத்தில் எழுதா ஒரு கவிதையோடு.

ப்ரியமுடன்
கவிஜி


ஆதி முகத்தின் காலப்பிரதி
ஆசிரியர்: இரா பூபாலன்
வெளியீடு : பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
விலை : ரூ 70/
தொடர்புக்கு : 9095507547

எழுதியவர் : கவிஜி (9-Jan-17, 8:10 pm)
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே