விழியோடு ஊடல்

உன் விழி மையின்
வேர் தேடி
முகிழ்த்து எழுகிறதடி
என் வலிமையெல்லாம்…

உன் விழித்திரை படைக்கும் காவியம் படிக்க புவியில் எனையன்றி புலவன் இல்லையடி. படைப்பவள் இங்கே என் முகம் படிக்கும் வாசகியாகிப் போனாய். உன் காவியம் படிக்க வந்த நானோ புலவனாகிப் போனேன். முரண் பார்த்தாயா முகில் தீட்டும் கோலங்கள் நிலவில் வெண்மையாகிப் போகிறது. அனல் தீட்டும் கோலங்கள் மழையில் வானவில்லாகிறது.

இரவில் வானவில் தேடும் குழந்தையாய் ஆகிப்போனேனடி, நிலவில்லா கருவானமாய் தனித்து நிற்கிறேன், உலா வந்த போதெல்லாம், உறங்கிவிட்டேன். உள்ளம் உன்னை தேடுகையில் கண்ணாமூச்சி ஆடாதே கண்மணியே… கார்முகிலனின் கானக்குழலாய் கை சேர்வாயா… இசைத்திட காற்றாய் நிறைந்திருக்கிறதடி காதல்…


Close (X)

0 (0)
  

மேலே