மடையர் கூடி எழுதுகிறார் வல்லரசு என ஏட்டிலே

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிந்து நில்லடா
தலை நிமிரும் நேரத்தில்
தன் தரமிழப்ப தேனடா

பச்சை வயல் பார்த்தவன்
பட்டினியில் சாவதா
மிச்சம் ஏதும் இன்றியே
பிச்சை கேட்டு வீழ்வதா

பாருக்கெல்லாம் சோறு போட்ட
பச்சை தமிழர் நாமடா
பார்க்க கூட நாதி யற்ற
லட்சணத்தை பாரடா

ஏறு பூட்டி படியளந்த
ஏற்றமிக்க பூமியில்
ஏழ்மை வாட்டி உயிரிழந்த
தோற்றம் மிகுவதேனடா

நீயும் நானும் தின்னும் சோறு
அவனுழைப்பில் வந்தது
நீயும் நானும் வாழும் வாழ்க்கை
அவனுக்கென்ன தந்தது

நூறு மரணம் விழுந்த பின்னும்
கேட்க யாரும் இல்லையே
ஆறு கோடி பேர் இருந்தும்
ஆறுதல் தான் இல்லையே

புலியடித்து துரத்தும் மக்கள்
எலி கடித்து வாழ்வதா
வழி கொடுத்து வாழ்ந்த மக்கள்
வலி பிடித்து சாவதா

உழுது உழுது இருந்த தமிழர்
முதுகுடைந்து போகையில்
பொழுது போக்க நாளை தேடும் நமக்கு
முதுகு தண்டு ஏனடா

விடியும் போது மடியும் செய்தி
வந்து சேரும் போதிலே
கொடிகள் தூக்கா செடிகளாக
இருப்பதென்ன பாரிலே

மாடு கொண்டு மாலை வரை
நம்நாடு என்று உழைப்பவன்
வாடும் நிலை கண்டும் கூட
எருமை மாடு போல இருப்பதா

உழவன் வாழ வசதியற்று
போனதொரு நாட்டிலே
மடையர் கூடி எழுதுகிறார்
வல்லரசு என ஏட்டிலே

பொறுத்து பொறுத்து பார்த்ததெல்லாம்
போதுமடா தமிழனே
அவர் பொங்கி தின்ன சோறு இல்லை
பொங்கி எழு தமிழனே

உழவனற்ற தேசத்திலே
ஒன்றும் இல்லை கேளடா
உழைக்கும் அவனை காத்திடவே
ஒன்றுகூட பாரடா

..............................................................................................................................

எழுதியவர் : கி. கவியரசன் (11-Jan-17, 2:09 pm)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 62

மேலே