மொட்டைமாடி கனவென

சட்டென வாய் திறந்த
பெரிய விண்மீனின் பசி
ஆற்றியது இருப்பதிலேயே
மிகச்சிறிய கண்ட கண்கள்....
வந்து போய் வந்து போய்
வந்தே விட்ட தும்மலோடு
ஒரு நட்சத்திரம் சற்று நகர்கிறது...
சிறுதுளி கண்ணீரை
பெரும் காரணத்தோடு
சிந்துகையில் விண்கல் விலகி
போனதாக நம்பப்படுகிறது...
மொட்டைமாடி கனவென
திடும்மென வந்த மழையில்
பாய் சுருட்டி ஓடிவிடும்
பாசாங்கில் பரிதவிக்கிறது
இன்னும் தூரத்தில் விளைந்திருக்கும்
விண்மீன்....
பெருங்கனவுகளை நிலவுக்குள் அடைத்து
விட்டு திருட்டுத்தனமாய்
வந்து சேர்ந்து கொண்ட
முகமற்றவள் இன்னும் சற்று நேரத்தில்
எரியும் நட்சத்திரமாவாள்....
நீலம் பிடிக்கும் என்றவர்கள்
வானம் பார்க்கத் தொடங்கினார்கள்.....
வானம் பிடிக்கும் என்றவர்கள்
நீலம் பார்க்கத் தொடங்கினார்கள்.....
இரண்டும் பிடிக்கும் என்றவர்கள்
வரிசையற்ற நட்சத்திரமாகிக்
கொண்டிருந்தார்கள்....
எவர் கையிலோ ப்பூ ப்பூ
என்று ஊதி
சூடாற்றும் நட்சத்திரத்தை
ஒத்திருக்க ஆரம்பித்தது என் இருப்பு.....!

கவிஜி

எழுதியவர் : கவிஜி (12-Jan-17, 10:01 pm)
பார்வை : 97

மேலே