தித்திப்பிற்கு இணையாய்
எத்தனை இலக்கியம்
படித்தாலும்
பலர் படைத்ததைப்
பகிர்ந்தாலும்
இதற்கு நிகராய்
என் மொழியிலும்
எந்த மொழியிலும்
பார்க்கக் கிடைக்கவில்லை....
ஓர் அதிகாரத்தில்
இருபது வரிகளுக்குள்
எடுத்து வைக்கும்
கருத்துக்களை
இரண்டாயிரம்
பக்க நூல்களுகளுக்குள்
தேடினாலும் கிடைப்பதில்லை....
முன்னொரு முறை
படித்ததையே
பின்னொரு முறை
படிக்கும்போது
உள்ளத்து வளர்ச்சிக்கேற்ப
புதிது புதிதாய்
விளக்கங்களை நம் மனதில்
விதைக்கும் கழனி
இதைப் போல் வேறொன்றில்லை....
உள்ளத்து அயர்ச்சியின்போதும்
உறவுகளின் பிரிவின்போதும்
எண்ணத்து தளர்ச்சிகளின்போதும்
என்றோ படித்த
இருவரிகள்
தரும் ஆறுதல்
வேறு எதிலும் கிடைப்பதில்லை.....
ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன் எமக்காக
வாழ்வியலை சமைத்திட்ட
திருவள்ளுவரே
நீ தந்த திருக்குறள்
எம் மொழியில்
தமிழ் மொழியில்
இயற்றினாய் என்பதற்கு
இணையாய்
வேறு எதுவும்
பெருமையில்லை எமக்கு.....
தினம் தினம் படிக்கும்
திருக்குறள்
சில தரும்
தித்திப்பிற்கு இணையாய்
வேறு எதுவும்
வாழ்வில் இனிப்பில்லை
தமிழ் மொழி வாழும்வரை
தமிழர்கள் வாழும்வரை
நின் புகழ் வாழும் !
தோழர்களே! அறிஞர்களே !
தமிழ்ச் சான்றோர்களே...
அய்யன் திருவள்ளுவர்
நாள் வாழ்த்துக்கள்
அன்பர்கள் அனைவருக்கும்.......