எச்சரிக்கை

-
சைக்கிள் கேப்பில டேங்கர் லாரி ஓட்டுறதுன்னா இதுதாங்க… ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கக்கோரி மாணவ சமூகத்தின் எழுச்சி மிகுந்த போராட்டம் அமைதியாக, அறவழியில் நடந்துவரும் இவ்வேளையில், மாநில-மத்திய அரசுகள் கடந்தகால தவறுகளை சரிசெய்து, தீர்க்கமான ஒரு தீர்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில், ஜல்லிக்கட்டு என்பது மதவிழாவில் ஒன்றென்றாலும் கூட, எவ்வித மதச்சார்புமின்றி, வேறெந்த அரசியல் சாயம் இன்றியும் நடந்தேறிவரும் நல்ல தருணத்தில், மதத்தை மட்டுமே முன்னிறுத்தும் மூர்க்கச் சிந்தனை கொண்டவர்கள் தங்களுக்கு சாதகமாக சமூகத்தைத் திருப்பப் பார்க்கிறார்கள். எப்படி?
அகில இந்திய மஸ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைஸி (தினமணிச் செய்தி: ஜனவரி 21, 2017- பக்கம் : 11)
ஒரு சுட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது அது: ” தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இது, தமிழர்களின் உணர்வை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. இதேபோல இந்தியா போன்ற வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்ட நாட்டில், பொது சிவில் சட்டம் கோரும் ஹிந்துத்துவா சக்திகளுக்கு, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் ஒரு பாடமாக அமைந்துள்ளது. பல்வேறு இன மக்களை கொண்ட நமது நாட்டில்ன் நலனுக்கு,, பொது சிவில் சட்டம் ஏற்றதல்ல. இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.” என்றும், “”தங்களது ஒற்றுமையால், உச்சநீதிமன்றத் தீர்ப்பையே முறியடிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவதற்கு மோடி அரசையும், அதிமுக அரசையும் தமிழக அரசையும் நிர்பந்தித்து விட்டனர்.” என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ”இல்லை… இன்னும் எதிர்பார்க்கிறேன் “ என ஊதிவிடுகிறார்.
சிவில் சட்டத்திற்கும்: ஜல்லிக்கட்டிற்கு சட்டம் போடுவதற்கும் இடையே முடிச்சுப்போடும் திட்டம் எதற்காக? இவர்கள் மதத்திற்கு மாநில வாரியாக தனித்தனியாக இடஒதுக்கீடு, இன்னபிற சலுகைகளைப் பெற்று தங்கள் மதத்தை மட்டுமே காலூன்ற வைக்கும் நப்பாசையில்தான் இவர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறதா? அரசியல் வாடையே நுழையாமல் மிகத்துல்லியமாக, மிகப்புனிதமுடன் போராட்டத்தை நடத்திவரும் மாணவ சமூகம் இதை எப்படிப் பார்க்கிறது? எங்கள் பிரச்சினை வேறு: உங்கள் பிரச்சினை வேறு , என முகத்தில் அடித்தாற்போல கூற வேண்டாமா? ஏன் கூறவில்லை. ஆக, மேற்படி நபர்களின் நயவஞ்சகப் போக்கு பெரும்பாலானவர்களுக்குப் புரியவில்லை என்பதே காரணம்.
திரு. நரேந்திரமோடி என்னும் தலைவர் பிரதமராக வரும் வரை, தறிகெட்டும் ஓடும் காட்டுக்குதிரைகளாக ஓடி, கறுப்புப்பணம், தீவிரவாதம், மதமாற்றம், சுயநல அரசியல் நடத்தி தேசத்திற்கு பெரும்சேதம் விளைவித்த கூட்டம் இன்று மோடியின் பெயரை கெடுப்பதாக நினைத்துக்கொண்டு, தேசத்தை கூறுப்போட மாணவர் சமூகத்தை பயன்படுத்தப்பார்க்கிறார்கள். மேலும், சிவில் சட்டத்தை மாணவர் சமூகம் எதிர்ப்பதாகவும், ஒட்டு மொத்த தமிழர் சமூகமும் எதிர்ப்பதாகவும், கூறுவதன் நோக்கத்தை கூர்ந்து நோக்க வேண்டும்.
தமிழகத்தின் ஜல்லிக்கட்டு (மதம் சார்ந்த பண்டிகையின் வருவது மற்றும் மாநிலத்தின் தொன்மை கலாச்சாரம் குறித்த முக்கிய அடையாளம்), பஞ்சாபின் எருதுச் சண்டை , இன்னும் பல மாநிலங்களின் தனித்துவ அடையாளங்கள் எவ்வளவோ உள்ளன. இவற்றைக் காத்துக்கொள்ள அரசாங்க ரீதியிலான தனித்துவம் பொருந்திய சட்டங்கள் வழிவகை செய்து கொள்ளலாம். இதுவே உண்மை. அவ்வாறு அதனை செய்து கொள்ளாமல் இருந்தால், இனியாவது செய்து கொள்ள வேண்டியது அந்தந்த மாநிலங்களின் பொறுப்பு. இதுவே மாநில சுயாட்சியின் உண்மைத்தன்மை.
இதை இத்தனை ஆண்டுகாலம் சென்றபின் மோடி அவர்கள் உணர்த்தியிருக்கிறார். மோடி அவர்கள் ஏற்கனவே ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்தான். சிலரின் கூப்பாடு போல, விவரம் தெரியாதவரல்ல மோடி. தான் பிரதமராகப் பதவியேற்றபோதே, ”நான் மாநிலங்களின் தனித்துவத்தன்மையை சீர்குலைக்கமாட்டேன். எதேச்சதிகார மனப்பான்மையுடன் நடக்க மாட்டேன்.“ எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சிவில் சட்டம் என்பது ஒரு தேசத்தின் மக்கள் அனைவரும் தங்களுக்குரிய மொழி, இன, மத, கலாச்சார உரிமைகள் அனைத்தையும் அப்படியே கடைப்பிடித்து, அதே வேளையில், தேசத்தின் பிற அம்சங்கள் அனைத்திலும் ஒரே நிலைப்பாட்டை பின்பற்றும் தன்மை கொண்டது. இதில், பிரத்யேக அம்சங்களைக் காரணம் காட்டி, எவரும் சலுகைகளைப் பெற இயலாது. அனனைவருக்கும் ஒரே நீதி. இதுவே சிவில் சட்டம் குறித்த எனது எளிய விளக்கம். இதுபோன்ற சிவில் சட்டம் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் விளங்குகிறது. அங்கு மானிட சமூகம் அனைத்து உரிமைகளையும் பாரபட்சமின்றி பெறத்தான் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையில் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒன்றுபட்டு, ஓரணியில் இருப்போம் எனக்கூறுவது தவறாகும்? திரு.நரேந்திர மோடி அவர்கள் இந்துத்துவா சட்டத்தை மட்டுமே இனி இந்தியா பின்பற்றும். இந்த நாடு இந்து நாடு. இந்துக்களுக்கு மட்டுமே அனைத்து உரிமைகள், சலுகைகள், பிரதிநித்துவம் என்று கூறினால்தானே தவறு ?

இதைப்புரிந்து கொண்டும் , தங்கள் மதத்திற்காகவும், இந்த தேசத்தில் மதம்மாற்றப்பட்ட மக்களுக்காகவும் மட்டுமே பரிந்துபேசுவதாக, மேற்படி நபர் பா.ஜ.க.வின் சிவில் சட்டத்தை பரிகாசம் செய்கிறார். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் இத்தகைய நிலைப்பாட்டை அனைவரும் உணரவேண்டும்.
இதே போல, தமிழகம் முழுமையும் அமைதியாக அறப்போர் நடக்கும் வேளையில், சென்னை மெரீனா கடற்கரையில், இஸ்லாம் மதத்தினர் ஒரு குழுவாக வெளிப்படையாக, பொது இடத்தில் ஜல்லிக்கட்டிற்காக தொழுகை நடத்தினராம். (காண்க: புகைப்படம்- தினமலர்- 21 ஜனவரி, 2017 பக்கம்: 16). தமிழர்களின் ஜல்லிக்கட்டை மீட்பதில் இவர்கள் ஒத்துழைப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆனால், அதே வேளையில், இவர்கள் மத அடையாளத்துடன்தான் செய்ய வேண்டுமா?
மழை வேண்டி தனித்தனி மர்றும் சர்வமதப்பிரார்த்தனைகள், ஒரு நல்மனிதர் ஆரோக்கியம் பெற , அதேபோல் பிரார்த்தனை, கல்வியில் வெற்றிபெற பிரார்த்தனை, இயற்கை சீற்றங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பிரார்த்தனை என பலவாறும் செய்யலாம். ஆனால், ஒரு ஜனநாயக நாட்டில், மத்திய- மாநில அரசுகள் தேசத்தின் இறையாண்மைக்கு உட்பட்டு, மதச்சார்பற்று, அரசியலுக்கு அப்பாற்பட்டு, நடைபெறும் ஒரு நியாயமான ஆர்ப்பரிப்பிற்கு, போராட்ட களத்துக்கே சென்று ஊடுருவி, சில தினங்களுக்குப்பின் தங்கள் மதத்தை அங்கு அடையாளப்படுத்தும் வகையில் “தொழுகை” நடத்தினால் அது தவறில்லையா? ஏன் இந்த வேண்டாத வேலை?
இதேபோல், நாளை அங்கு “சிலுவை” யுடன் பிரார்த்தனை செய்வர் சிலர். உடனே அங்கு பொங்கல் வைத்து தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, வேண்டலாம். அப்போது மட்டும், இந்துத்தீவிரவாதம் நுழைந்துவிட்டதாகக் கூறுவர். சைக்கிள் கேப்பில டேங்கர் லாரி ஓட்டுறதுன்னா இதுதாங்க…இது தேவையா? இதைத்தான் மாணவர் சமூகம் இதை நிச்சயம் வரவேற்காது. ஒரு தவறான பாதைக்கு தமிழகம் திருப்பபட்டு விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
ஏனெனில், ஒரு இந்தி எதிர்ப்புப்போராட்டம் தவறான சிலரின் நோக்கத்தால், ஒரு தலைமுறையையே பாதிக்கும் வகையில், திசைதிருப்பப்பட்டது. எச்சரிக்கை செய்கிறேன். அதேபோல், இனியொரு விபரீத திருப்பம் இனி நடந்தேறக்கூடாதென இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.

எழுதியவர் : M.பழனிவாசன் (26-Jan-17, 4:23 pm)
சேர்த்தது : m. palanivasan
Tanglish : yacharikkai
பார்வை : 445

மேலே