விதி - பாகம் 4
விதி சிலருடைய வாழ்க்கையில் அதிர்ச்சி தரும் சம்பவங்களை புரிந்திருக்கிறது. அநேகருக்கு எத்தகைய எதிர்காலம் காத்திருக்கிறது என்று தெரியாத நிலை. விதி எவ்வாறு செயல்படுகிறது? அதற்கு யார் யார் எவ்வாறு துணை போகிறார்கள்? விதியின் நோக்கம் என்ன? விதியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் ?
சிலருடைய வாழ்க்கையில் அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நிகழ்வது என்பது தவிர்க்கப்பட முடியாதது. ஜோதிஷ சாஸ்திரத்தின் துணை கொண்டு பார்க்கையில் இதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். ஒரு பெரிய ‘கியூ’ நிற்கிறது. ஒருவர் பின் ஒருவராக நகர்ந்து செல்கின்றனர். ஒவ்வொருவராக பூலோகத்தில் பிரவேஸிக்கின்றனர். கிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.ஜனை காலத்தில் ஒவ்வொருவருடைய கிரக நிலை மாறிக்கொண்டிருக்கும்.
உதாரணத்திற்கு பின்வருமாறு. ஒரு குழந்தை பிறக்கிறது. அப்போதுள்ள கிரக நிலை - லக்னத்திலிருந்து ஏழாவது வீட்டில் செவ்வாய். அது சந்திரனுடைய நவாம்சத்தில் உள்ளது. இதற்கு சுபகிரகத்தின் பார்வை ஏதும் கிட்டவில்லை. இப்படி கிரக நிலை ஆதான லக்னத்தில் அமைந்திருக்கலாம். அல்லது ஜனன லக்னமாகவும் இருக்கலாம். இந்த வேளையில் பிறக்கும் குழந்தை அதனுடைய நக்ஷத்திர தினத்திலிருந்து 77-வது நக்ஷத்திர தினத்தன்று இறந்துவிடும்.
இதை எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு ஆத்மா பூலோகத்தில் பல பிறவிகள் எடுத்து கடைசியாக 77 நாட்கள் பூலோக வாஸம் அதற்கு பிறகு ஒரு நல்ல கதி காத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஆத்மா ஒரு தம்பதியர்களுக்கு குழந்தையாக பிறந்து குறுகிய காலம் ஜீவித்திருந்து பிறகு இறந்து விடுகிறது.
பூலோக வாழ்க்கையிலிருந்து அதற்கு விடுதலையும் கிட்டுகிறது. அந்த அல்ப ஆயுஸ் உள்ள குழந்தை ஏன் தம்பதியர்களுக்கு பிறக்க வேண்டும்?
அந்த தம்பதிகள் தவறான நேரத்தில் கூடி இருந்தனர். இப்படி ஒரு சோக நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் ஜோதிஷ சாஸ்திரத்தை கற்றுக்கொண்டு அன்றாட வாழ்க்கையை அதன்படி நடத்தி செல்ல வேண்டும். அது நிச்சயமாக முடியாது. ஆனால் ஓரளவு நல்லவேளை, பொல்லாத வேளை எது என்பதை பெரியவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய காரியத்தை உத்தேசித்து வீட்டை விட்டு வெளியே புறப்படும் போது சகுன நிமித்தங்களை கவனிப்பது நல்லது. சுபஹோரையில் வீட்டை விட்டு புறப்பட்டு பிரயாணத்தைத் தொடர்வது பயனுள்ளது. சாலையில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் மரத்திலிருந்து கிளை முறிந்து அவர் தலையில் விழுந்து இறக்கிறார். அவர் வீட்டைவிட்டு புறப்பட்ட நேரம் தவறாகிவிட்டது.
அன்றாடம் நமக்கு கிடைக்கும் தகவல்கள் - பேரிழப்புகள், விபத்துகள், துர்மரணங்கள், இன்னும் ஒரு சில. சிலர் நல்ல அறிவுத்தன்மையோடு முன்னெச்சரிக்கையாக இருந்து நேரவிருக்கும் நஷ்டங்களை தவிர்க்கின்றனர். அநேகர் பலவித நஷ்டங்களைச் சந்தித்து, தங்கள் வாழ்க்கையில் விதி குறுக்கிட்டது என்று குற்றம் சாட்டுகின்றனர். இவர்கள் கூறுவது வாஸ்தவமான விஷயம்.
இது பற்றிய ஆய்வைத் தொடங்குவோம். ஒவ்வொருவனும் திருந்தி வாழவேண்டும். இனி தவறே செய்யக் கூடாது என்ற வைராக்யத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிடமுள்ள பாபங்கள் அனைத்தையும் தொலைத்துக்கட்ட வேண்டும். அது மட்டுமல்ல. அவரவர்களிடமுள்ள பலவீனங்கள் வெளிப்பட்டு இனி தவறே செய்யக்கூடாது என்ற பக்குவ நிலையை அடைய வேண்டும். ஒவ்வொருவனையும் பதினான்கு சாட்சியங்கள் நடத்தி செல்கின்றன. இவற்றிற்கு துணைபோகும் வகையில் அவனுடைய புத்தி இயங்குகிறது.
அந்த புத்தியில் கண்களுக்கு புலப்படாத தேவதை ப்ரவேஸிக்கிறது. விதி நிர்ணயித்த வழியில் பலவீனர்களை அவர்களுடைய புத்தி அழைத்துச் செல்லுகிறது. ஒரு பெரிய உதாரணத்தைக் கொண்டு இதை புரிந்து கொள்வோம்.
மஹா பாரத யுத்தம் நிகழவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அது நிகழ வேண்டுமானால் பஞ்ச பாண்டவர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை இழக்க வேண்டும். துரியோதனாதிகள் அதை அபகரிக்க வேண்டும். இவ்வாறு ஏற்பட்டால் தான் மஹாபாரத யுத்தம் நடக்கும். எல்லா நற்குணங்கள் பொருந்திய தர்மரிடம் சூதாட்டத்தில் விருப்பம் என்ற பலவீனம் குடியிருந்தது. இதை நன்கு தெரிந்து கொண்ட துரியோதனன் தர்மரை சூதாட்டத்திற்கு அழைக்கிறான். தர்மரும் சகுனியும் சூதாட்டம் ஆடுகிறார்கள். இருவரும் திறமைசாலிகள் தான். சூதாட்டத்தில் காய்களை உருட்டி விடும்போது அங்கு திறமை எதுவும் எடுபடாது. தர்மர் தோற்றார் சகுனி வெற்றி பெற்றான்.
விதி தர்மரை சூதாட்டத்தில் சகுனி வெற்றி பெற்றது எப்படி? பாண்டவர்களுக்கு விரோதமாகவும் துரியோதனனுக்கு ஆதரவாகவும் பகவான் கிருஷ்ணர் செயல்பட்டு சகுனியை ஜெயிக்க வைத்தார். எப்படி? அந்த ரஹஸியத்தை கிருஷ்ணர் யுத்த பூமியில் அர்ஜுனனுக்கு கீதோபதேசத்தில் வெளியிடுகிறார்.
“சூதில் நான் ஜயமாக இருக்கிறேன் (ப. கீதை..10 - 36..)
சூதாட்டத்தில் சகுனி வெற்றி பெறுவதற்கு கிருஷ்ணர் உறுதுணையாக இருந்தார் என்பது தெளிவாகிறது. இதை அன்று பஞ்ச பாண்டவர்கள் உணரவில்லை. கீதோபதேசம் பெற்ற பிறகும் இதை உணர்வதற்கு அவர்களுக்கு வாய்ப்பு இருந்ததாக தெரியவில்லை. இப்படி ஒரு மகத்தான நிகழ்ச்சிக்கு பகவானே உறுதுணையாக இருந்து விதியின் கார்யத்தை பூர்த்தி செய்தார். தவமிருந்து ப்ரம்மாவிடம் கும்பகர்ணன் வரம் கேட்கும் போது சரஸ்வதி அவனுடைய நாக்கில் புகுந்து அவனுடைய உச்சரிப்பு தடம்புரள அவனுக்கு கிடைத்தது ஆறு மாதம் தூக்கம் ஆறு மாதம் விழிப்பு. அவன் எடுத்த முயற்சி தோல்வி கண்டது. அவனுக்கு விதிக்கப்பட்டதோ எதுவோ அது நடந்து விட்டது.
அதை சரஸ்வதி செவ்வனே நடத்திவிட்டாள். இது போல உதாரணங்கள் இதிகாசம், புராணங்களில் காணக்கிடக்கின்றன. நம் போல அற்ப மானிடர்களுக்கு சரஸ்வதி தேவி போன்ற பெரிய தேவதை அவஸியமில்லை. குட்டி தேவதைகள் ஏராளமாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவைகள் தங்களுக்கு இட்ட பணியை நன்றாக செய்து வருகின்றன. அதனால் தான் அவரவர்களிடம் குடி கொண்டுள்ள பலவீனங்கள் சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டு அதன் காரணமாக தவறுகள் இழைக்கப்பட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
இதனால் என்ன பயன்? ஒருவன் தெரிந்தே தவறு செய்கிறான். அதன்மூலம் கிடைக்கும் தண்டனையை அநுபவிக்கிறான். பிறகு மனம் திருந்துகிறான். மீண்டும் அதே தவறை செய்யமாட்டான். ஆக அவன் ஒருவகையில் திருந்தி விட்டான். ஆனாலும் அவனிடம் வேறுவிதமான பலவீனங்களும் உள்ளன. அவைகளிடமிருந்தும் முற்றிலும் விடுபட வேண்டும். அவைகள் உரிய சந்தர்ப்பங்களில் தான் வெளிப்படும். அதுவரை காத்திருக்க வேண்டும். ஒருவனை கண்காணிக்கும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தேவதைகள் உரிய நேரத்தில் காரியத்தில் இயங்கும். அது இவ்வாறும் நடக்கக் கூடும். சிலர் விளையாட்டிற்கு பொய் சொல்லி மகிழ்வர். விளையாட்டு வினையில் முடியும் என்பதற்கேற்ப அதனால் விபரீத விளைவுகளைக்கண்டு அவர்களே கதி கலங்கி நிற்பர்.
பொதுவாக மனிதனை ஆட்டிப்படைப்பது மண், பெண், பொன். இந்த மூன்றையும் துச்சமாக மதித்து இருப்பது போதும் என்று ஆசை ஏதுமில்லாமல் ஒருவன் வாழ்ந்து வந்தால் அவனிடமிருந்து தேவதைகள் விலகி மரியாதையுடன் நிற்கும். இத்தகையோரை நாம் முதலில் அடையாளம் கண்டு அவருடைய குணநலன்களை ஆய்வு செய்ய வேண்டும்.
ஒவ்வொருவரிடம் நல்ல பண்புகள் (றிஷீsவீtவீஸ்மீ sவீபீமீ) பலவீனங்கள் (ஸீமீரீணீtவீஸ்மீ sவீபீமீ) உண்டு. சில நல்ல பண்புகள், நற்குணங்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டது மிகவும் பலம் பெற்றிருந்தால் நாளடைவில் அவருடைய பலவீனங்கள் பலமிழந்து முற்றிலும் பலவீனங்களிலிருந்தும் விடுபடுவர். துரதிஷ்டவசமாக சாகஸம் செய்து கொண்டிருந்தால் அவரிடமுள்ள ஒரு சில நற்பண்புகளும் அர்த்தமற்று போய் விடும். இத்தகையோர் வெகு விரைவில் தங்கள் அழிவைத்தேடிக் கொள்வர். இத்தகையோர்கள் ஆரம்ப காலத்தில் தவறான செய்கைகளில் ஈடுபடும் போது தேவதைகள் வெகுவாக ஒத்துழைப்பு தருகின்றன. இதனால் தான் தவறு செய்பவர்கள் பலசாலிகளாகவும், (தவறான வழியில்) சாதனை படைப்பவர்களாகவும் காட்சி அளிக்கிறார்கள். இதைப்பார்த்து மற்றவர்கள் ஏமாறக் கூடாது.
விதியை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்? அது பற்றி எந்த கவலையும் கொள்ளாதிருப்பதே மிகவும் உகந்தது. என்ன நிகழப்போகிறதோ என்று எண்ணி இருக்கிற நாட்களை பயந்து பயந்து கழிக்கக் கூடாது. வருவது வரட்டும் என்று அலக்ஷியமாக இருப்பது புத்திசாலித்தனம். அதற்கு முன்னதாக ஒருவன் தன் பக்கலில் அதர்மத்திற்கு இடம் கொடுக்காது எச்சரிக்கையாக இருப்பது அவஸியம். காட்டுக்கு போகுமுன் கௌஸல்யை ராமனிடம் உபதேசம் செய்தாள்.
“ராமா நீ எந்த தர்மத்தைக் காப்பாற்றுவாயோ அந்த தர்மம் உன்னைக் காப்பாற்றும்” என்றாள். இது கிட்டதட்ட வியாபார ஒப்பந்தம் மாதிரி. பணம் கொடுத்தால் தான் கையில் வஸ்து வந்து சேரும். அது போல ஒருவன் கண்மூடித்தனமாக தர்மத்தை காப்பாற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இன்னல்கள், நஷ்டங்களை சந்திப்பது சகஜம் தான். பொறுமையாக இருந்து வந்தால் விரைவில் அவனால் வாழ்க்கை பாதையை தடங்கலின்றி கடந்து செல்ல முடியும். ஒருவன் மனம் வாக்கு செயல்பாடு என்ற மூன்றிலும் சுத்தனாக இருந்தால் மட்டும் போதாது நான்காவதாக அர்த்தம் (பணம்) விஷயத்தில் சுத்தனாக இருக்க வேண்டும்.
தனத்தை அடைவதிலோ அல்லது செலவிடுவதிலோ நேர்மையாக செயல்பட வேண்டும். பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது மகத்தான பழமொழி. நன்றாக படித்த மேதைகள், பண்டிதர்களை ஆட்டிப்படைப்பது பணம், புகழ். இதன் காரணமாக பண்டிதன் தவறு செய்யத் தொடங்கினால் பாமரனும் அவனை இகழ்வான்.
இப்போது நாம் 2017 ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய ஆத்மாக்கள் எவ்வாறு இந்த பூவுலகில் உழன்றன? அதற்கும் முன்னால்? அதற்கும் முன்னால்? ஆயிரமாண்டுகளுக்கும் முன்னால்?
இது பற்றி தீவிரமாக சிந்தித்தால் நம்மிடையே இன்னும் எவ்வளவு ஆத்மாக்களுக்கு மறுபிறப்பு காத்திருக்கிறது? அவர்களில் நானும் ஒருவனா? என்று சிந்தித்து பார்ப்பது தவறாகாது.