சீதைகள் நடத்தும் சுயம்வரத்தில்

அன்று சீதைகள் காத்திருந்தனர்
ராமனை மணக்க இன்றோ
சீதைகளை வேண்டி
எத்தனையெத்தனை ராமன்கள்
பெண் தேடி அலைகின்றனர்

அன்று வரதட்சிணைகள்
அவள் திருமணத்தை நிர்ணயித்தன இன்றோ
அவள் நிர்ணயிக்கிறாள்- மணமகனின்
உச்சபட்ச சம்பளத்தை வைத்து

அன்று சீதைகள் இருந்தனர்
கன்னிகளாய் முதிர்கன்னிகளாய்
இன்றோ ராமன்கள்
கல்யாண வரம் கிடைக்காமலேயே
தனியன்களாய் மொட்டை மரங்களாய்
பூக்கமுடியாமல் காய்த்து கனிய முடியாமல்

இறுதியை நோக்கி பயணிக்கும்
இவர்களின் தலை நரைத்து கூன் விழும் வரை
சீதைகள் வேண்டாம் -ஓர்
கூனி கூட கிடைக்கவில்லை

இளமையை கரைத்து வாலிபம் போன
இவர்கள் கடந்த தலைமுறை சாபத்தின் மிச்சங்கள்
சீதைகள் நடத்தும் சுயம்வரத்தில்
லட்சங்களில் சம்பளமும் சொந்த வீடுகளுமே
நுழைவு தகுதிகளாயின

ஆயிரங்களில் சம்பளமும்
வாடகை வீடுகளில் வசிப்போர்களும் சபிக்கப்பட்டனர்
ஆயுள் முழுமையும் தனிமரங்களாகவே தவிக்க

அடுத்த தகுதி என்ன தெரியுமா
மணமகனுக்கு தாய் தகப்பன் இருக்கவே கூடாது
இருந்தாலும் அவர்கள் வந்து போகவே கூடாது
அன்னான் தம்பிகள் கூடவே கூடாது
இப்படியெல்லாம் நிபந்தனைகளோடு
சீதைகள் சுயம்வரத்தில்

மணமகன்களோ செரிக்கமுடியாமல்
கண்ணீரின் விளிம்பில் நின்றபடி
வாலிபத்தை தொலைத்துவிட்டு
வயோதிகத்தை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை
வரலாறுகள் எழுதப்போகின்றன

இது மிகைப்படுத்தப்பட்டவை அல்ல
இன்றைய இளைஞர்களின்
கையறு நிலை தோழரே !

எழுதியவர் : கவிஞர் ச ரவிச்சந்திரன் (30-Jan-17, 6:46 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 48

மேலே