விடியலின் தோற்றமாய்

புன்னகையில் சூரியனை பூட்டிவைத்த வெண்ணிலவாய்
பொன்னெழிலாய் ஓவியத்தைப் பூவிழியின் தூரிகையால்
மின்னலெனத் தீட்டிவிட்டு மெல்லிடையின் அசைவினிலே
மென்மனதை பறித்தபடி மேகமென காதல்மழை
கன்னலென பொழிந்தவளின் கைப்பிடித்துக் கரைசேர்ந்த
காலமதன் கோலமதை காலமுள்ளக் காலம்வரை
உன்னதமாய் ரசித்திருக்கும் உவகைநிலை விடியலது
ஒழுகிவரும் தோற்றமென உயிரினிலே ஏற்றிவைத்தேன்


அன்னமவள் நடந்துவர அந்திமலர் வாசனையை
அன்பளித்து வரவேற்று அர்ச்சனையும் செய்திருக்க
பின்னல்சடை காற்றாட பேரெழிலோ கூத்தாட
பெருக்கெடுத்த ஆசைநதி பேதலித்துக் கரைதாண்ட
முன்னரிது போலில்லா முற்படுக்கை வேதனையோ
முடிவற்று நீண்டிருந்த மோகனத்தை நான்படித்து
மன்மதனின் மனங்கவர்ந்த மங்கைரதி நிகர்த்திங்கள்
மனம்விடிய தோற்றமுற்ற மயக்கும்விடி வெள்ளியன்றோ!

இருள்கவிழும் இரவினிலே இருவிழிகள் மூடுகையில்
இன்னமுத காதல்மலர் இதமுடனே விரிந்துவர
அருளொளியைப் பீய்ச்சுகின்ற அபூர்வ ஆதவனாய்
ஆனந்தக் கனவின்வான் அழகொளிர பவனிவந்தே
பருவத்தின் ஆசைகளாய் படர்ந்திருக்கும் துயர்நீக்கிப்
பகல்பொழுதை பரிசளிக்கும் பனிவிடியல் தோற்றமென
உருவத்தைப் பெற்றிருந்து உள்ளத்தை எனக்களித்து
உறவாட வந்திணைந்த உயர்வான சோதியன்றோ!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (28-Feb-17, 10:15 am)
பார்வை : 348

மேலே