காதலியின் முதல் தொடுதல்

காதலியின் முதல் தொடுதல்

உன்விரல்கள் முதன் முதலாய்ப்
------பட்டபோது மெய் சிலிர்த்தேன்
தென்றல் காற்றது வீசியும்
------வியர்வையில் தேகம் குளித்தேன்
அன்னத்தின் வெண்மை சிறகிதுவோ?...
--------அகவும் மயிலின் இறகிதுவோ?...
மின்னலின் கிற்றுகளாய்க் கேள்விகள்
---------வந்துவிழ மனம் மரித்தேன்
கன்னம் வருடும் கைகள்
------அசைத்த நொடியினில் சிரித்தேன்......


அனலென கொதிக்கும் நிலமதில்
--------மேகம் பொழியும் சிறுதுளியாய்
வனமெங்கும் அலர்ந்த மலரதில்
-------உறக்கம் கொண்ட தேன்துளியாய்
மனதின் வெஞ்சினம் தணித்து
-------மதுவினை என்னுள் ஊற்றிட
புனல் வழியும் நதியாய்
-------மயக்கம் சிரசினைத் தழுவிட
கனவென்று அறியாத உலகில்
-------பறந்து செல்வதை உணர்ந்தேன்......


மஞ்சள் நிலவது மூழ்கிட
------பொங்கும் கடலில் விழுந்து
நெஞ்சம் அதனை மோதிடும்
------அலையினில் படகாய் மிதந்து
பஞ்சப் பூதங்களின் கொடும்
------------பிடியில் சிக்கித் தவித்திட
நஞ்சுண்டு உயிரும் துடிக்கையில்
-------கிடைக்கும் அரிதான மருந்தாய்
அஞ்சு விரலால்நீ தீண்டுகையில்
---------புத்துயிர் பெற்று எழுந்தேன்......


Close (X)

5 (5)
  

மேலே