தொலைந்த வாழ்க்கை முறைகள்

கலைந்தது கூட்டுக் குடும்ப முறையும்
--தொலைந்தது முன்னோர் செய்த முறைகள் !
நாகரீகப் போர்வையில் நம்மை மறைத்து
--வேகமிகு வாழ்வின் மோகத்தால் மறந்தோம் !
முறைகளைத் துறந்து நடைபோடும் நாமும்
--குறைகளைக் கூறியே கடக்கிறோம் காலத்தை !

சாணமிட்ட வாசலில் கோலமிடும் அழகும்
--வானம் தெரியா வீட்டினால் மறைந்தது !
கைக்குத்தல் அரிசியும் வலிவைத் தந்தது
--உரலும் உலக்கையும் காட்சிப் பொருளானது !
அம்மியில் அரைத்தத் துவையல் மணக்கும்
--அரைக்கும் கருவியால் சுவையும் போனது !

சமைத்திடும் முறையே சமையல் நூலானது
--அமைத்திடும் எதுவும் சாத்திரம் என்றானது !
நவீனமென்று நல்லதை நாம் இழந்திட்டோம்
--அல்லல் குறைந்திட அந்நியவழி நாடுகிறோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (10-Mar-17, 7:27 am)
பார்வை : 335

மேலே