கிளிகளின் போராட்டம்

கிளிகளின் சுதந்திரப் போராட்டம்!

எங்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள அண்டைவீட்டு சன்னல் என் சமையல் அறைக்கு வெகு அருகாமையில்.... சன்னல் கம்பிக்கு உள்புறம் சிறு கூண்டிற்குள் ஒரு சோடிப் பச்சைக்கிளிகள்... அதிகாலையில் காகம் குருவி புறா தேன்சிட்டு என பறவையினங்கள் குரல் ஒலி காதிற்குள் ரம்மியமாய் ஒலிக்கும்.. ஆனால் கூண்டுக் கிளிகளின் குரல் மட்டும் எனக்கு அபயக்குரலாகவே கேட்கும்... பலமுறை அதை வளர்க்கும் சிறுவனை கிளிகளை விடுவித்துவிடும்படி வேண்டிக் கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போனேன்....

ஆனால் பத்து நாட்களுக்கு முன் எங்கிருந்தோ இரண்டுக் கிளிகள் வந்தன... அந்த சன்னல் அருகே சென்று பலமாகக் குரல் எழுப்பபியபடி சன்னல் கம்பிகள் மீது மோதும் வகையில் பறந்து படபடவென இறகுகளை அடித்து கூட்டிலிருந்த பறவைகளை விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.... உள்ளிருந்தக் கிளிகளோ இன்னும் பலமாக அபயக் குரலில் கதறின.... இது இப்படியே நான்கு நாட்களுக்கு மேலாய் காலைவேளையில் தொடரும் சம்பவமாக இருந்தது......

இரு தினங்களுக்குமுன் வெளியிலிருந்து போராடும் கிளிகள் எண்ணிக்கை நான்கானது..... போராட்டம் சற்றுத் தீவிரமானது.... பார்துக் கொண்டிருந்த என்மனமோ கனமானது....

அவை என்ன மொழியில் பேசிக் கொண்டனவோ.... என்ன செய்தியை பரிமாறிக் கொண்டனவோ ஆண்டவனே அறிவான்... ஆனால் தன் இனத்தைக் காப்பாற்ற இறுதிவரை முயற்சிக்க முடிவெடுத்துள்ளன என்பது மட்டும் நிச்சயமாய் தெரிந்தது....

இன்று காலையில் ஒரே அடியாக பல கிளிகள் குரல் பலமாய் ஒலிக்க... வேகமாய் சமையலறை கதவைத் திறந்து பார்த்தேன்.... ஒரு கிளிக் கூட்டமே அங்கே அமர்ந்து கத்திக் கதறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன... படம் எடுக்க முயன்றேன்.... போராட்டம் செய்த கிளிகள் கலைந்துச் சென்றன..... ஏதோ ஒரு குற்ற உணர்வு எனக்குள்.... உடனே கிளிகளுக்கு ஆதரவாய் போராட்டக் களத்தில் இறங்கினேன்.... அந்த வீட்டுச் சிறுவனை அழைத்த கிளிகள் சார்பில் நேரில் பேச்சுவார்த்தை நடத்தினேன்.... இறகுகள் துண்டிக்கப் பட்டுள்ளன இவை வளர்ந்தவுடன் அவற்றை விடுவிப்பதாய் சிறுவன் வாக்குறுதி கொடுத்தான்... மனம் சற்று இலேசானது..... ஆனால் போராட்ட வெற்றியை அந்தக் கிளிக் கூட்டத்திடம் சொல்லும் மொழி எனக்குத் தெரியவில்லை.... ஆனால் நிச்சயம் அவை என் அன்பு மொழியை உணர்ந்துக் கொள்ளும்.....

தனிமனித சுதந்திரம் வேண்டும் மானிடமே... நீயும் பிற உயிர்கள் சுதந்திரத்தில் தலையிடாதே....பூமியில் எங்கும் வாழும் உரிமை அவற்றிர்க்கும் உண்டு.

கவிதாயினி அமுதா பொற்கொடி


Close (X)

0 (0)
  

மேலே