மானமுள்ள மனிதராக வேண்டும்

இனவாத எரிமலையை இதயத்தில் வைத்து
=எப்போதும் கனக்கின்ற இடரிங்கு வேண்டாம்
வினயமுடன் உரைக்கின்ற வீண்வாத வம்பு
=வேரூன்றிக் கொள்தற்கு வேற்றுமைகள் வேண்டாம்
சனநாயக மெனும்பெயரில் சனம்மீதிற் காட்டும்
=சர்வாதி காரத்தின் சாயலுமே வேண்டாம்
மனமொன்றி வாழ்கின்ற மக்கள்முன் னாலே
=மாற்றாந்தாய் மனப்பான்மை மறுபடியும் வேண்டாம்
சிறுபான்மை இனத்தார்மேல் சிங்கங்கள் சூழ்ந்து
=சிறுநீரைக் கழிக்கின்ற செயலெதுவும் வேண்டாம்
மறுமலர்ச்சி எனக்கூறி மக்கள்தமை தூண்டி
=மறுபடியும் வேதாளம் முருங்கையேறல் வேண்டாம்.
நறுமணமே வீசிவரும் நன்மலரின் தோப்பில்
=நுகர்வதற்கு துர்மணத்தை நுழையவிட வேண்டாம்
நிறுத்திவைத்து கேள்விகளால் நெஞ்சங்களைக் குத்தி
=நிதம்துளைத்த நிகழ்வுகளும் நினைவுவர வேண்டாம்
நேற்றெங்கள் வாழ்வினிலே நின்றிருந்த துன்பம்
=நேற்றோடே முடிந்ததுவாய் நினைத்திருக்க வேண்டும்
காற்றெனவே எவருமிங்கு கவலையற்று நாளும்
=கடல்கடந்து உலவிவர கைகொடுக்க வேண்டும்
ஊற்றெனவே பாய்ந்துவரும் உள்ளத்தின் எண்ணம்
=உருபெறவே பகைமைகளை உடைத்தெறிய வேண்டும்
மாற்றமொன்று நாடுகின்ற மக்களெலாம் வாழ்வில்
=மானமுடன் தலைநிமிர்ந்த மனிதராக வேண்டும்
*மெய்யன் நடராஜ்