யாராவது கடவுளை கண்டால் சொல்லுங்கள்
யாராவது கடவுளை கண்டால் சொல்லுங்கள்
ஆத்திகராயினும்
நாத்திகராயினும்
நாமத்தினராயினும்
பட்டையிராயினும்
சிலுவையராயினும்
பிறையினராயினும்
பகுத்தறிவோராயினும்
எவரேனும் ஒருவராவது
கடவுளை கண்டால்
தயவு செய்து சொல்லுங்கள்
பூமிக்கு வரவேண்டாம் என்று
காவிகளுக்கும்
கருப்புகளுக்கும்
கிருபைகளுக்கும்
தொழுகைகளுக்கும்
இடையில் நசுங்குவதும்
பலிகடாவாவதும்
பகடைகளாய் போவதும்
எங்களுடனே போகட்டும்
அரசியல் சந்தையில்
அதிக லாபத்திற்கு
அமோகமாய் விற்பனையாவதும்
கடவுள் பிரிவினைதான்
எல்லா கட்சியிலும்
எல்லா பிரிவும் உண்டு
ஒருவேளை பிரிவுகள்
மாறி ஒற்றுமை கண்டால்
தங்கள் பிழைப்பு பிழைக்காது
என்று பிழைக்கும்
மூடர்களிடம்
பக்தி அகதியாய்
அல்லல் படுவதும்
அடிக்கடி கொல்ல படுவதும்
எங்களுடனே போகட்டும்
எவரேனும் கடவுளை கண்டால்
கட்டாயம் சொல்லுங்கள்
தப்பி தவறி கூட
பூமிக்கு வரவேண்டாம் என்று
அங்கேயே தங்கி
நிம்மதியாய் இருக்கட்டும்
யாருக்குமே தெரியாமல்
கடவுள்
இருந்தாலும் சரி
இல்லாமல் போனாலும் சரி
ந.சத்யா