செவ்வரளிப் பூக்கள்

ஒன்பது அகவை
இருக்கலாம் எனக்கு
சிறியதும் இல்லாமல்
கொஞ்சம் அளவாய் தெரிந்த அதை
எடுத்து வைத்துக் கொண்டேன்
நிச்சயமாய் யாரும்
கவனிக்கவில்லை
ஆளாளுக்குச் சண்டையிட்டுக் கொண்டார்கள்
மேற்கே தென்னந்தோப்பு
வயலும் வீடும்
கிழக்கே தோட்டமும்
பிரித்து வைக்கப்பட்டது
என்னை யாரும் கவனித்திருக்கவில்லை
மெல்ல நழுவிக் கொண்டேன்
பதினாறு வருடக் கழிப்பு
யாரும் யாருடனுமில்லை
மெதுவாய்க் கைகள்
உள்ளேவிட்டுப் பார்க்கிறேன்
அவரையும் மொச்சையும்
தோட்டத்துத் துவரை வாசமுமாய்
மனம் கசிந்தது
நெய் மணக்கும்
பருப்பு சாதமும்
ரச சாதமும்
உருட்டி ஊட்டி வளர்த்த
அம்மாயி கரங்கள்
தட்டுப்பட்டது
அழுகையுடன் துழாவுகிறேன்
மீண்டும் மீண்டும்
அந்த பழுப்பும் வெள்ளையும்
கலந்த பீங்கான் ஜாடியை
யாருமே கவனித்திருக்கவில்லை!


-கார்த்திகா அ

எழுதியவர் : கார்த்திகா அ (31-Mar-17, 11:14 am)
சேர்த்தது : கார்த்திகா
பார்வை : 90

மேலே