இயற்கை

சேவல் கூவ செவியுற்று
செக்கச் செவேலென மெய்சிவந்து
தன்சூடு தாங்காது தக தகவென
சுடர் விட்டெழுந்தான் ஆதவன்!
எண்ணிக்கை சரியா என எண்ணிப்பார்த்து
இரைதேடும் இலக்கில் இறகை
விரித்துப் பறந்தன மின்கம்பத்தில்
வரிசையாய் அமர்ந்திருந்த பறவைகள்!
மெல்லென வீசிய தென்றல் காற்று
காதில் ஏதோ கிசுகிசுக்க
இலை கொட்டிச் சிரித்தன மரங்கள்!
இமயத்தையே சுமப்பதாய் இறுமாப்பில்
குத்திட்டு சிலிர்த்து நின்றன
பனித்துளி ஏந்திய புற்கள்!
அலைக்குழந்தை நெஞ்சில் தவழ
நுரை பொங்க வாய்விட்டுச்
சிரித்தாள் கடல் அன்னை!
பூமியை காலத்திற்கும்
மழையினின்று காக்கும் பூரிப்பில்
பூத்து நின்றன காளான்கள்!
மதுசுவைத்த வண்டின் இதழ்களை
தன் இதழ்களால் மெல்லென துடைத்து
கண்சிமிட்டின காதலில் பூக்கள்!
காலத்திற்கும் அழியா ஓவியமோ இதுவென
குதித்துப் பதிந்த கன்றின் கால் தடத்தில்
பால் சொரிந்து மெய்மறந்தன பசுக்கள்!
காலணி அறியா கால்களுக்கு
சேற்றுப் பாதுகை அணிந்து
ஏருடன்வீர் கொண்டு நடந்தான்
வயல்நோக்கி உழவன்!..........!........!...