புதுமைப் பெண்

மருதாணி சிவப்போடு மாந்தளிர் தேகமெடுத்து
சருகினில் நடந்திடும் சத்தமற்ற பாதங்களோடு
கருங்குழல் முடிந்து கருணையின் பேரழகுடன்
நெருப்பினில் அலர்ந்த நெய்தல் மலரிவள்......


வேற்கண் வீசுமம்பில் வேதனைகள் விலகிடவும்
நேற்றையப் பொழுதின் நஞ்சினை அமுதாக்கவும்
பாற்கடல் வேந்தனும் பார்த்திடாத அகிலமாய்
மாற்றிட வந்திருக்கும் மின்னலின் ஒளியுண்டவள்......


மண்ணில் வாங்கும் மங்கையின் காயத்திற்கும்
கண்ணீர் பெருகும் கவலையின் சோகத்திற்கும்
பெண்மைச் சிறகினைப் பலியாக்கும் சடங்கிற்கும்
வண்ணம் கொடுக்காத விடுதலைச் சுடரிவள்......


இன்னல் தருமந்த இருளெனும் சாதியில்
அன்னத்தின் மென்மையில் ஆங்கார கோலத்தில்
பொன்னொளி கொண்டு பிளந்து எழுந்திடும்
என்றென்றும் தேயாது எங்குமொளிரும் வான்மதியிவள்......


கொடுமைகள் செய்திடும் காஞ்ச மனத்தோரின்
கொடும்பிடி நீங்கிட கடுஞ்சினத்தில் சிரசினை
நெடுங்கை வாளேந்தி நறுக்கி எறிந்து
நடுநிசி தோற்றமாய் நடுக்கந்தரும் காளியிவள்......

எழுதியவர் : இதயம் விஜய் (4-Apr-17, 8:29 am)
பார்வை : 1356

மேலே