யாமறிந்த மொழிகளிலே

"இந்தி தெரியுமா?"
"ஆங்கிலம் தெரியாதா?"
"அட. தமிழ் பேசுவீங்களா?"
பேசத்தெரியும், படிக்க தெரியாது.
எழுதத்தெரியும், ஆனால் நல்லா பேசத்தெரியாது.

மொழிகள் எல்லாம் பரிச்சயமாய்
மனிதர்களிடம் சிக்கித்தவிக்கும்.
உளறல்கள் புரிந்துகொள்ளப்படும்,
அனர்த்தங்களும் ரசிக்கப்படும்,
அர்த்தங்களை இரட்டிப்பாக்கி
இடஞ்சல்களில் எத்தனை முறை?

அந்தக்காலத்தில் இங்கிலீஷ் தெரியாமல்
எத்தனை சினிமா நாம் பார்த்தோம்?
இசையால் வசமாக்கி நினைவில் நிற்கும்
எத்தனை இந்திப்பாடல்கள்?
தமிழைக்கூட பேசாமல் இங்கிலீஷ் பெருமையில்
இருந்தவரெல்லாம் நம்மில் எத்தனை பேர்?

எனக்கு பிடித்தது இந்த மொழிகளல்ல,
வேறு இரண்டு மொழிகள் மட்டுமே.!
எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பிடிக்கும்
அந்த மொழிகள் நம் எல்லோருக்கும் கூட தெரியும்.

எழுத்தே இல்லாமல் இலக்கணமும் புரியாமல்
யாப்பும் அசையும் சீரும் இல்லாமலே அந்த மொழிகள் நம்மால் பேச முடியும் பார்க்க முடியும்.!

ஊமைகள் கூட பேசும் மொழி அதிலொன்று
செவிடராலும் புரிந்து கொள்ள இன்னொன்று
குருடரால் ஒன்று முடியும், மற்றது முடியாது.

பிறந்த குழந்தையிடம் உணர்த்த முடியும்
அந்த மொழி - அது பார்வையே.
நன்றி சொல்ல வார்த்தை கூட வராது
வந்தாலும் ஏதோ செயற்கையாய். அப்போது்
தோதான மொழி நமக்கு பார்வை மட்டும் தானே.

"பேசக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்."
என்கிற போது ஆஸ்பத்திரியில் என்ன மொழி?
மௌனமாய் பார்வைகள், இரட்டை மொழி அங்கே.

ஆம். மௌனமும் பார்வையுமே எனக்கு பிடித்த
அந்த இரண்டு மொழிகள்.
பள்ளிக்கூடம் போனவனுக்கும் போகாதவனுக்கும்
தெரிந்த மொழிகள் அவை தானே உண்மையிலே சிறந்த மொழிகள்!

பாசத்தில் வாஞ்சையுடன் பார்வை மட்டுமே
அப்பாவுக்கும் பையனுக்கும் மௌனமாய் அநேகமாய்.

ஊடல் முடிந்து கணவனும் மனைவியும் இந்த மொழிகளில்லவா இணைகிறார்கள்.

எனவே தான் சொல்கிறேன்,
நான் என்னிடம் மட்டுமே பேசமுடியாத
மொழி, பார்வை. கண்ணாடியில் தவிர.

எல்லோருக்கும் பிடித்த
சண்டை சச்சரவு வராமல் இருக்க
கம்முன்னு இருக்க நமக்கு கிடைத்த
ஒரே மொழி? - மௌனம் தானே, வேறென்ன?

- கவிஞர் செல்வமணி, கோவை
11-4-2017

எழுதியவர் : செல்வமணி (11-Apr-17, 7:25 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 565

மேலே