வெறும் மனிதர்களாக

வெறும் மனிதர்களாக

எந்த வழக்குமில்லாத போதும்
எனது வாதங்களையே முன் வைக்கிறேன்...

எந்த தீர்ப்பையும்
விரும்பாத நீயும்
உனது வாதங்களையே
தீர்ப்பென்கிறாய்...

வாதி பிரதிவாதியானோம்
வழக்கொன்றை உருவாக்க..

மாற்றுச் சிந்தாந்தங்கள்
தவறானவை என்றே
கற்பிக்கப்படுகிற உலகில்
வாதிட்டு சலித்தபின்
வாதிகளோடு தொடர்கிறது வாள்வீச்சு

சில நம்பிக்கைகளுக்காக சிரமறுக்கிறோம்
சில நம்பிக்கைகளுக்காக சிரமிழக்கிறோம்

கோட்பாட்டுத் தொற்றுநோய்களை
குணப்படுத்தாமல் பரப்பிக்கொண்டிருக்கிறோம்

இருமையே இயற்கை என்றிருந்தும்
கற்பிக்கப்படுகிற
ஏதோ ஒரு
ஒருமைக்காக
போராடுகிறோம்

சிந்தனை முழுதும்
சிந்தாந்த சித்ரவதைகள்
வா நன்பா
போதும் நாம் போராடியது
கரம் கொடுத்து நாளாகிறது
நீயும் நானும்

கோட்பாட்டுச் சுமைகளை
இறக்கி வைப்போம்
சிந்தாந்த துறப்பில்
சில நேரமிருப்போம்
அருகருகே அமைதியாய்
வெறும்
மனிதர்களாக மட்டும்.

நிலாரவி.

முத்துக்கமலம் இணையஇதழில்
வெளியான என் கவிதை
(நன்றி - முத்துக்கமலம் இணையஇதழ்)

எழுதியவர் : நிலாரவி (14-Apr-17, 12:26 pm)
பார்வை : 158

மேலே