தினமலர்’ நாளேட்டில் மதுரைப் பதிப்பு 332007---நாடி ஜோதிட நிலையத்தில் கூறியது பொய்யான தகவல்

புரட்டுகளில் தலையானப் புரட்டு இந்த ஜோதிடப் புரட்டே! ஜோதிடம் என்பது ஒரு நல்ல சுரண்டல் தொழில். மோசடி வியாபாரம். செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அபார திறமையை என்னென்று சொல்வது! ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுபவரும் இருக்கத்தானே செய்வார்கள்?


இதனை, நல்ல `முதல் இல்லா’ மூட நம்பிக்கை வியாபாரமாகச் செய்து செழித்து வருகின்றனர் பலர் பல தலைமுறைகளாக!


இந்த மோசடியில்கூட பல்வேறு வகை உத்திகள், ரேகை ஜோதிடம், நாடி ஜோதிடம், ஏடு பார்த்தல், கிளி ஜோதிடம், குருவி ஜோதி டம், எண் கணித பலன், பிறந்த நாள் பலன் என இப்படி அடுக்கடுக்கான மூட நம்பிக்கைகள்.


இதனை அரசுகள் மோசடி, ஏமாற்றுக் கிரிமினல் குற்றங்களாக க்கருதி அப்பேர்வழிகளைத் தண்டிக்கவும் தயங்கக் கூடாது.


சீர்காழிக்கு அருகில் உள்ள வைத்தீஸ்வரன் கோயில் என்ற ஊரில் நாடி ஜோதிடக்காரர்கள் பலர் உண்டு.பல ஊர்களிலிருந்தும் அவர்களிடம் படையெடுக்கும் படித்த பாமரர்களான பேராசைக்காரர்கள் ஏராளம் உண்டு. அவர்களது ஏமாற்று மோசடிபற்றிய சுவையான வழக்கு ஒன்று சீர்காழி மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணைக்கு வந்துள்ள செய்தி


அதுவும் `தினமலர்’ நாளேட்டில் மதுரைப் பதிப்பு (3.3.2007), 16 ஆம் பக்கத்தில் வந்துள்ளதை அப்படியே கீழே தருகிறேன், படியுங்கள்.


`இறந்தவர்’ நீடூழி வாழ்வார் என ஜோதிட கணிப்பு நாடி ஜோதிடர் மீது கோர்ட்டில் மனு


``சீர்காழி, மார்ச் 3- சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் மில்லடி தெருவில் சிவசாமி நடத்தி வரும் அகஸ்திய மகா சிவ நாடி ஜோதிட நிலையத்திற்கு சீர்காழி தாடாளன் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் ஜோதிடம் பார்த்துள்ளார். கோபாலகிருஷ்ணன் கட்டை விரல் ரேகையை வைத்து அதற்குரிய ஓலைச் சுவடி எடுத்து வந்து படித்துள்ளனர்.


ஜோதிடர் கூறிய தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றாலும், அதற்குக் கட்டணமாக ரூ.இரண்டாயிரம் முன்கூட்டியே கோபாலகிருஷ்ணனிடம் பெற்றுள்ளார்.


நாடி ஜோதிட நிலையத்தில் கூறியது பொய்யான தகவல் என்பதை தெரிந்த கோபாலகிருஷ்ணன், ஜோதிடரின் சுய ரூபத்தை அறிய, கடந்த 2003 ஆம் ஆண்டு இறந்துபோன நபரின் கை ரேகையை எடுத்துச் சென்று பலன் கேட்டுள்ளார். அதற்கு `இவர் (இறந்து போனவர்) குழந்தைகளுடன், செல்வங்களுடனும் நீடூழி வாழ்வார்’ என பலன் சொல்லப்பட்டுள்ளது இதுபற்றிய அச்சடித்த நகலும் கோபால கிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளது. கோபாலகிருஷ்ணன் தன்னைப் போல இனி வேறு யாரும் ஏமாறக் கூடாது என கருதி, சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், ஓலைச் சுவடிகளை வைத்து எனக்கு நாடி ஜோதிடம் பார்த்து பொய்யான தகவல்களைக் கூறியுள்ளனர். எனவே, உரிய விசாரணை நடத்தி நீதி வழங்க வேண்டும் என கோரியுள்ளார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீலாவதி, நாடி ஜோதிடர் சிவசாமி வரும் 21 ஆம் தேதி சீர்காழி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.’’


செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அபார திறமையை என்னென்று சொல்வது! ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுபவரும் இருக்கத் தானே செய்வார்கள்?


இந்த நாடி ஜோதிடர்களிடம் சென்று பார்த்த மாஜி அமைச்சர்கள் பலரை நாம் அறிவோம்! அதில் ஒருவர் பெரியாரிடமே இருந்தவன் நான் என்று கூறி பல கட்சிகளுக்குச் சென்று ஓய்ந்தவர்!


தந்தை பெரியார் சொன்னதுதான் எனக்கு நினைவுக்கு வந்தது.
ஒரு நாயின் பிறந்த நேரத்தைக் குறித்துக் கொண்டு அதற்கு ஆண் பெயர் இட்டும், ஒரு பெண் பூனை குட்டி போட்ட நேரத்தையும் வைத்து ஜாதகங்கள் கணிக்கப்பட்டு, அவை களுக்கு ஆண், பெண் பெயரை வைத்து ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்கச் சொன்னால், ``பலே பலே பேஷாக இருக்கிறது, சுப முகூர்த்தத்தை நல்ல நேரத்திலேயே முடிச்சுடலாம்’’ என்றுதான் சொல்வார்.


`என்னய்யா, இது நாய்; அது பூனை’ என்று அடையாளம் கண்டு சொல்லும் அறிவு எந்த ஜோசியருக்காவது உண்டா? என்பார்கள்!


மோசடிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று பாடிக்கொண்டே போகலாம் போலிருக்கிறது!


ராமனுக்கு முகூர்த்த நாள் பார்த்தவர் பிரம்மரிஷி வசிஷ்டர் - மிகவும் பல்வேறு சோதனை தவங்களையெல்லாம் செய்து சூத்திரரானதால் பிரம்மரிஷியாக முடியாமல் (பிராமணர்களால் மட்டுமே முடியும்) பிறகு, பிரம்மரிஷி ஆன விசுவாமித்திரர், இவர்கள் எல்லாம் செய்த ``சீதா கல்யாணத்தின்’’கதிதான் என்ன?


`உம்! `தலைவிதி’ன்னு ஒன்று இருக்கே’ என்பார்கள், சமாதானத்திற்கு! ``அப்படி ஒண்ணு இருக்கையில், ஜோசியம், செவ்வாய் தோஷம், ராசி பலன் ஏன் பார்க்கணும்?’’ என்று கேட்டால், பதில் கிடைக்கவே கிடைக்காதே!
இந்தப் புரட்டுகளில் தலையானப் புரட்டு இந்த ஜோதிடப் புரட்டே!


Close (X)

0 (0)
  

மேலே