நீயின்றி அமையாது உலகு

நீயின்றி  அமையாது உலகு

இந்த உலகத்திலேயே மிக அற்புதமான மனிதரை உங்களுக்கு இப்போது அறிமுகம் செய்து வைக்கப்போகிறேன்.நீங்கள் என் எழுத்துக்களை படித்து கொண்டிருக்கக்கூடிய இந்த நொடி அந்த மனிதர் உங்கள் வீட்டில் தான் இருக்கிறார்.

அந்த சிறந்த மனிதரை காணவேண்டுமா ?

எழுந்து சென்று கண்ணாடி முன் நில்லுங்கள்!

ஆம்.இந்த உலகத்தில் மிகச் சிறந்த மனிதர் நீங்கள் தான்.நீங்கள் நினைப்பதையும் காட்டிலும் நீங்கள் பலசாலி,நீங்கள் நினைப்பதை காட்டிலும் நீங்கள் புத்திசாலி.இந்த உலகம் உங்கள் நம்பிக்கை சிறகுகளை மறக்க வைத்திருக்கலாம,அதனால் பருந்து நீங்கள் ஊர்க்குருவி ஆகிவிட முடியுமா?


இந்த கட்டுரையின் தலைப்பை பார்த்த உங்கள் கண்கள் அண்ணார்ந்து பார்த்திருக்கும்,என் எழுத்தின் மையம் காதலாக இருக்கும் உங்கள் இதய துடிப்பு உங்களுக்கு உணர்ந்திருக்கலாம்.சரி தான்!உங்கள் மீது நீங்கள் கொள்ள வேண்டிய காதலை புதுப்பிக்க தான் என் எழுத்தாணி இங்கே தலைகுனிகிறது!
மனிதா !உன்னை பற்றி உனக்கு தெரியாத சில உண்மைகளை எடுத்துரைக்க போகிறேன்.அதை நீ பார்க்கும் விளையாட்டு போட்டி போல் உன்னிப்பாக கவனித்திடு!விவசாயிகள் பிரச்னை போல விளையாட்டை எடுத்துவிடாதே..!

இயற்கையின் படைப்பில் நீ ஒரு அதிசயம்!உன்னை தவிர இங்கு எல்லாமே அஃறிணைகள் தான்.உன்னைத்தவிர பேரறிவு படைத்த ஜீவராசிகளின் பெயர்பட்டியலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
இறைவனின் அம்சம் நீ!புதிய உலகத்தை உருவாக்கும் ஆற்றல் படைத்தவன் நீ!
இந்த விவரங்கள் ஏதொன்றும் அறியாமல் மூலையில் முடங்கி கிடைக்கிறாயே.உன் கால்களை முடமாக்கியது காலம் அல்ல,நீ தான்!

உன்னை சுற்றி நம்பிக்கை ஒளி பரவி கிடைக்கிறது,ஆனால் அஞான விளக்கை விட்டு வெளிவர மறப்பது நீ தான் !

இந்த உலகத்தால் உன் முயற்சிக்கு தானே முட்டுக்கட்டை போடமுடியும்,உன் நம்பிக்கையை என்ன செய்யமுடியும்?உன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருப்பது லட்சிய நெருப்பு,அதனால் உன் அவநம்பிக்கையை பொசுக்கு!

ஆயிரம் தோல்விகளின் விலாசம் கேட்டு நீ வெற்றியை அடையும் போது அது செல்லாது என்று சில குள்ளநரிகள் மேல்முறையீடு செய்யலாம்.சிங்கம் நீ,தெருநாயின் குரைப்பிற்கு அஞ்சுவதா ?
எல்லையில்லாத வெற்றி பிரேதேசத்தின் சக்கரவர்த்தி நீ,கேவலம் குள்ளநரிகளின் மனக்குமுறல் கேட்டு உன் கனவு சாம்ராஜ்யத்தை களைத்து விடாதே!


நீ செல்லுகின்ற பாதை முட்களால் நிரம்பி இருக்கலாம்,ஆதனால் என்ன முட்களின் இடையில் தான் ரோஜா வசிக்கும்!வலிகள் இல்லாமல் வழிகள் இல்லையே.வலிகளை ஏற்று கொள்க !

வாழ்க்கை பயணத்தில் ஒரு கட்டத்தில் தற்காலிகமான பிரச்சனைகள் கையாள முடியாமல்,நீ நிரந்தரமாக உக்கார்ந்து விடுவதற்கு காரணிகள் என்ன என்பதை சிந்தித்து பார்த்தேன்.கண்டுகொண்டேன்!உனக்கு உன் துயரங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பலவீனங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது,உன் பிடரியை பிடித்து ஆட்டக் கூடிய உலகத்தின் வார்த்தைகள் மீது நம்பிக்கை இருக்கிறது.ஆனால் நண்பா உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லாமல் போனதேன்?
நம்பிக்கையை விவாகரத்து செய்து விட்டு கவலைகளை ஏன் கட்டி கொண்டு அழுகிறாய்?

வா!உன் கவலை காட்டை விட்டு வெளியே வா.

நீண்ட துயில் கலை !உனக்காக விடிந்திருக்கும் விடியல் பார்!உன் முகம் கனவே உதித்திற்கும் ஆதவன் பார்.

உன் பாதங்களை ஸ்பரிசித்து செல்லும் காற்றை உணர முடிகிறதா?நம்பிக்கையோடு முகம் மலருகின்ற மலர்களை பார்!

நீ காணும் மனிதர்களின் உதட்டினையும் உள்ளத்தையும் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்ற உற்சாகத்தை கடன் வாங்கு!வானத்தை அண்ணார்ந்து பார்!

இதற்குமேலும் உற்சாகத்தை நீ அள்ளி அணைக்க வில்லையென்றால்,கவலை உன்னை கொஞ்ச கொஞ்சமாக கொன்றுவிடும் தோழா!

இந்த நிமிடம் உன்னையே நீ மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம்!

இந்திய சரித்திர புத்தகத்தில் எல்லோர்க்கும் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.உனக்கான பக்கத்தை உன் வேர்வைகளால் எழுத்து,கண்ணீரால் அழித்து விடாதே!


நீ இன்றி அமையாது உலகு...!கோவை.சரவண பிரகாஷ்


  • எழுதியவர் : சரவண பிரகாஷ்
  • நாள் : 20-Apr-17, 4:10 pm
  • சேர்த்தது : சரவண பிரகாஷ்
  • பார்வை : 159
Close (X)

0 (0)
  

மேலே