களவுபோகும் எமது தமிழ்நடை

களவுபோகும் எமது தமிழ்நடை

தொன்மையான எம் இன்தமிழ்தனை நித்தம்
தொட்டு விளையாடுவதே என் வழக்கம்...

ஒவ்வொரு வார்த்தைகளும் அதைத்தொடரும் நெடுநடை வரிகளும்
பல்வேறு கோணங்களில் என்னால் இரசிக்கப்பட்டே செதுக்கப்படுகின்றன...

தொடர்ச்சியாய் பிரசவிக்கும் எதுகை மோனைகளைக்கொண்டு
முதிர்ச்சிகாணாத செம்மொழியில் வரைந்த வரிகள் எண்ணற்றவை...

மங்காத மங்களத்தோடு என்றும் குன்றாத தமிழில் எழுதிவிட
ஏங்காத நாட்களில்லை இன்றும் ஓங்காத என் அரிச்சுவடியில்...

கானல் நீராகிப்போன என் காதல் வரிகளைக்கண்டு
கனல் பிளம்பாய் கண்ணீர் சிந்திய முகநூல் நட்புக்கள் சிலர்...

நிழற்பட வரிகளை நித்தம் கோரிக்கைவைத்து
கட்செவி அஞ்சலில் அவ்வப்போது காத்திருக்கும் நட்புக்கள் சிலர்... என

ஒருசில நட்புக்களே எனக்கு உண்டு
ஓய்வெடுக்கும் வேளைகளில் என் எண்ணங்களை நான் வெளிப்படுத்த...

எத்தனை வேலைப்பளு எனக்கு இருந்தபோதிலும்கூட
ஏதேனும் தலைப்பினை எழுதிடும் என் எழுத்தாணி...

எத்தனையோ நாட்கள் அல்லும் பகலும் விழித்திருந்து
ஒப்பனைசெய்து என் வரிகளை எண்ணங்களால் மெருகேற்றி...

உருபொருள்கொண்டே அதனினூடே புகுத்தி வாசித்து
உவமைகளை உச்சரித்து இரசித்து...

எனக்குள் நானேகண்ட பலகனவுகளை உளியாக்கி
எழுத்தாணி முனையில் அதனைச் செதுக்கி...

இணையதளத்தில் பதிவேற்றி தவளவிடும் அக்கணமே
இம்சை எனக்கருதி எனை தூற்றியவர்கள் எத்தனைபேர்...?

பிணையக்கைதி எழுதிட்ட சுயசரிதை காண்பதுபோல்
முனையொடிந்த என் எழுத்தாணியே முகம்சுழிக்கத் தொடங்கியது...

ஆம்..
அதன் காரணமாய்தான்...

துளித்துளி வரிகளாய் சேகரித்த முற்றற்ற பலவரிகள்
முழுமைபெறாமல் இன்றும் முடங்கிக்கிடக்கின்றது...!

விழிநீர் கண்ணங்களில் குருதிக்கரை படிந்து
விமர்சனங்கள் தெறித்த விடைதொலைத்த வரிகளை எவரேனும் இதுவரை வாசித்ததுண்டா..?

அழகினை வர்ணித்து அசுரணையும் மையல்கொண்ட காதல் வரிகளை
அவசியமற்றதாய் கருதி அலட்சியப்படுத்தியவர்கள் கணக்கிலில்லையே...!

இரகசியக் கனவுகளில் நீந்தும் இலட்சியப் பாதைகள்பற்றி
எழுதிவிட எனக்கும் ஏராளமான ஆசைதான்...

"எமது வரிகள் இனியேனும் களவுபோகாமல் காக்கப்படுமேயானால்..."


Close (X)

0 (0)
  

மேலே