காதல் பற்றிய சிறப்பு தொகுப்பு
பிப்ரவரி 14 ஆம் தேதி, இந்த நாளுக்கு மேற்கொண்டு அறிமுகம் தேவையில்லை. காதலர்களுக்காகப் போராடிய வாலண்டைன் என்ற பாதிரியார் மறைந்த நாள் இது. காலத்தால் அழியாத காவியங்களைக் காதலர்களால் மட்டுமே படைக்க முடியும். அத்தகையவர்கள் காதலர் தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
இது காதல் தானா?
நீங்கள் டீனேஜ் பருவத்திலிருக்கிறீர்கள்...
உங்கள் கிளாஸ்மேட், பேஃஸ்புக் நண்பர், பக்கத்து வீட்டு பையன், தோழியின் அண்ணன் என்று ஒருவரை உங்களுக்கு ரொம்ப பிடிக்கிறது. ஆனால்! இந்த விருப்பம் வெறும் நட்பா, காதலா என்று எத்தனை முறை குழம்பி இருப்பீர்கள்?
கதை, கவிதை, திரைப்படம், ஓவியம், இன்டர்நெட் என்று எங்கு பார்த்தாலும் காதலைப் பற்றிய பேச்சு! இருந்தும் உங்கள் குழப்பத்தை தீர்க்க முடியவில்லையா? நோ பிராப்ளம்! கீழே உள்ள குறிப்புகள் நிச்சயம் அது காதலா அல்லது நட்பா என்று தெரிந்து கொள்ள உதவும்!
அந்த `ஸ்பெஷல் நபரை' நினைத்துக்கொண்டு படித்துப் பாருங்கள். இது காதல்தான் என்றால் :
முன்பைவிட மேக்கப்பில் அதிக நேரம் செலவாகும்.
உடைகள் வாங்கும் போது உங்கள் நினைவில் தோன்றுவது "இது `அவனுக்கு' பிடிக்குமா?" என்பது தான்!
பாடங்கள் படிக்கும் போது நினைவுக்கு வருவது `அவனோடு' என்ன பேசலாம் என்பது.
ஆசிரியர் பாடம் நடத்தும் போது காதில் விழுவது `அவன்' பேசியது மட்டுமே!
பர்ஃபியூம், சென்ட் என்று வாசனைப் பொருட்கள் வாங்குவதில் காசு கரைகிறது!
டெலிஃபோன் மணி அடித்தால் தாவிச் சென்று முதலில் எடுப்பது நீங்கள்!
`அவனை' நேரில் சந்தித்தது பத்தாமல் டெலிஃபோனிலும், இன்டர்நெட்டிலும் மணிக்கணக்காக அரட்டை தொடர்கிறது.
`அவனக்கு' விருப்பமான இசை, நடிகர்கள், (நடிகைகள் இந்த பட்டியலில் சேர முடியாது!) விளையாட்டில் திடீரென்று உங்களுக்கும் ஆர்வம் இருப்பதை கண்டுபிடிக்கிறீர்கள்!
நேத்து வரை நண்பிகளோடு வெளியே செல்ல அம்மாவிடம் சண்டைப் போட்டது போக, `அவன்' ஃபோன் செய்வார் என்ற காரணத்தால் அம்மாவே போகச் சொன்னாலும் வீட்டில் தங்கி விடுவது.
பீச், சினிமா, ஷாப்பிங் என்று எங்கு போனாலும் `அவன்' வந்திருக்கிறார் என்ற பிரமை ஏற்படுகிறது.
திருமணம், திருமணமான தோழிகள் திருமண வாழ்வு, எல்லாம் `போர்' என்று நினைத்த காலம் போய்விட்டது.
ஃபோன் செய்யும் போது உங்களை அறியாமலேயே விரல்கள் `அவன்' எண்ணை தட்டுகிறது.
(இரவு முழுதும் `அவன்' நினைவில் தூக்கமே வரவில்லை என்றாலும்) அம்மா எழுப்புவதற்கு முன்பே காலையில் சுறுசுறுப்பாக எழும்புவது.
என்ன? இப்போ புரியுதா....குழப்பம் தீர்ந்ததா....நீங்களே பாத்து ஏதோ நல்ல முடிவா எடுங்க...
இது காதல் தானா!
தனிமை வாட்டுகிறதா........?
இன்றைய நவநாகரீக உலகில் ஒருவர் தனியாக இருப்பது என்பதே அதிசயம்தான்."Socializing" என்னும் பெயரில் நமது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக இணையதளங்கள் 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை அனைவரையும் உலகத்தோடு பிணைத்து வைத்திருக்கிறது.
இப்படி இணையதள மோகத்தில் சிக்காதவர்கள் கூட, நண்பர்கள் அல்லது காதலன்/காதலியின் பிரசன்சில் தனிமையை தொலைத்திருப்பார்கள்.
எனவே, இன்றைய சூழலில் ஒருவர் தனியாக இருக்கிறார் என்றால் அவர் தீராத மன வேதனையில் உள்ளார் என அர்த்தம். காதல் தோல்வி, ஏமாற்றம், துரோகம் என ஏதாவது ஒருவிதத்தில் பாதிக்கபட்டிருக்கும் இவர்கள், இனி யாரையும் நம்ப வேண்டாம். மற்றவர்களுடன் இருந்து காயப்படுவதை விட தனியாக நிம்மதியுடன் இருப்பதே மேல் என்ற அளவிற்கு தீர்மானித்திருப்பார்கள்.
இந்த முடிவு நடைமுறைப்படுத்துவதற்கு மிகவும் கடினமான ஒன்று. எப்போதும் நண்பர்களுடன் இருந்து பழகியவர்களுக்கு தனியாக இருப்பது என்பது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். ஒரே நாளில் வாழ்க்கையே வெறுத்தது போல தோன்றும். இந்த சிக்கலான சூழலில் இருந்து வெளியே வர அதிக மன வலிமையும் சில எளிமையான டிப்ஸும் தேவை... அந்த எளிமையான டிப்ஸ் இதோ...
தனிமையில் இனிமை - நமது அனைவரது வாழ்விலும் ஏதாவது ஒரு தருணத்தில் கண்டிப்பாக தனிமை அதன் சுயரூபத்தை காட்டும். தனியாக இருப்பது ஒரு பெரிய இழப்பல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். தனிமையாக இருக்கும் போது நீங்கள் உங்கள் வாழ்வை உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில் வாழலாம்.
தனிமையை புரிந்துகொள்ளுங்கள் - தனிமையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாமே நம் சந்தோஷத்திற்காக இருப்பது. மற்றொன்று மிக சோகமாக இருக்கும் சமயம் தனிமையில் வாடுவது. இந்த இரண்டாம் வகையான தனிமை படுத்தும் பாட்டை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அச்சமயம் நம்மை புரிந்து கொண்டவர்களிடம், நம்முடைய வேதனைகளை கொட்டித் தீர்ப்பதால் ஓரளவு அந்த தனிமையிலிருந்து விடுபடலாம்.
தனிமையை புறக்கணியுங்கள் - உங்களை போல் தனிமையில் வாடும் வேறு ஒருவரைக் கண்டால் அவரிடம், சாதாரணமாக பேச்சு கொடுங்கள். ஒரு சிம்ப்பிளான அறிமுகத்திற்கு பின் நலம் விசாரியுங்கள். இப்படி செய்வதானால், உங்களின் புதிய நண்பரை தனிமையின் பிடியிலிருந்து விடுவித்திருப்பீர்கள். கொஞ்சம் நேரத்திற்கு உங்களைவிட்டும் தனிமை விலகியிருக்கும்.
குடும்பம் கைகொடுக்கும் - உங்கள் குடும்பத்தினரிடம் அதிக நேரம் செலவிடுங்கள். உங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது என நீங்கள் எண்ணினாலும், உங்களுக்கு தேவையான அனைத்து சந்தோஷமும் உங்கள் குடும்பத்திலேயே இருக்கலாம்.
தனிமையை வெல்லுங்கள் - தனிமையை மறக்க முயற்சி செய்யுங்கள். சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். சிறு வயதிலிருந்து உங்களை கவர்ந்த விஷயத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு உபயோகப்படும் வகையில் பொழுதுபோக்கு விஷயங்களை மாற்றி அமையுங்கள்.
இவை அனைத்தையும் விட தனிமையை நொடி பொழுதில் களைய ஒரு வித்தியாசமான, சுவாரஸ்யமான முறை உடனடியாக ஒரு செல்லப் பிராணி வாங்குவதுதான்.
நாய், பூனை, பறவைகள் என எதுவாக இருந்தாலும் உங்களிடம் இருந்து அன்பு மற்றும் சிறிது அக்கறையை மட்டும் எதிர்பார்க்கும் இவை என்றும் உங்களை மீண்டும் தனிமையில் விடாது என்பது உறுதி.
முத்தப் பொன்மொழிகள்!
முத்தத்தின் ஒலி பீரங்கி சத்தத்தை விட மென்மையானது. ஆனால் அதன்
எதிரொலி அதிக நாள் நீடிக்கிறது.
முத்தம் ரியல் எஸ்டேட் மாதிரி. அதில் லொகேஷன் ரொம்ப முக்கியம்.
மௌனத்தைக் கலைக்க சிறந்த வழி முத்தம்தான்.
ஆண்கள் தங்கள் கடைசி முத்தத்தை மறந்து நீண்ட காலம் ஆன பிறகும்
பெண்கள் தங்கள் முதல் முத்தத்தை ஞாபகம் வைத்திருக்கிறார்கள்.
ஆண்கள் நாலு லார்ஜ் உள்ளே இறங்கிய பிறகு தன்னை மறந்துவிடுவார்கள். பெண்கள் நான்கு முத்தங்களுக்குப் பிறகு எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்கள்.
முத்தம் காதலின் மொழி என்றால் அந்த மொழியில் நாம் பேச நிறைய இருக்கிறது.
முத்தம் உணவைப் போல : ஒரு வாய் சாப்பிட்டால் போதவே போதாது.
முத்தம் உப்பு நீரைக் குடிப்பது போல. குடிக்கக் குடிக்க தாகம் அதிகரிக்கிறது.
ஆண்கள் தங்கள் முதல் முத்தத்திற்கு பெண்களைக் கெஞ்சுகிறார்கள். பெண்கள் தங்கள் கடைசி முத்தத்திற்கு ஆண்களைக் கெஞ்சுகிறார்கள்.
முத்தத்தை உதட்டில் கொடுக்காமல் "ஃப்ளையிங் கிஸ்" கொடுப்பவர்கள் உலகமகா சோம்பேறி!
காதல்ன்னா என்ன? எப்படி காதலிக்கலாம்?
காதல் என்பது ஒரு வகையான தனித்த உணர்வு. அந்த உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அது உள்ளுக்குள் சென்று ஊடுருவி, அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது பாஸ். காதல் என்பது...
காதல் என்பது ஆசை, அன்பு, நட்பு, காமம், விரகம் ஆகிய உணர்வுகளில் ஒன்று அல்லது இவைகள் அனைத்தும் கலந்த ஒரு உணர்வு என்று பெரியார் சொல்கிறார்.
ஜாதி மாறி காதலித்தால் கலாச்சாரம் மாறிவிடும். பண்பாடு கெட்டுவிடும். காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடு. காதலை ஒழிக்க வேண்டும். காதல் திருமணங்கள் எல்லாம் பணம் பறிக்க நடக்கும் நாடகத் திருமணங்கள் என்று ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், காதலர்தினமும் நெருங்கி வரும் வேளையில் காதலைப்பற்றிய விரிவான விவாதம் தேவை என்று கருத வேண்டியுள்ளது.
முதலில் காதல் என்பது வெளிநாட்டுப் பண்பாடா என்று பார்க்க வேண்டியுள்ளது. இப்படிப் பேசுபவர்கள் தமிழ்நாட்டின் அரிச்சுவடியே தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். தமிழர் வரலாற்றில் காதல் ஒரு முக்கியமான பண்பாட்டுக்கூறு. தமிழ் இலக்கியங்களில் காதலைப் பற்றிப் பேசப்படாத, காதலைப் போற்றாத ஒரு இலக்கியத்தைக் கூட பார்க்க முடியாது. தமிழ் இலக்கியங்களில் அகநானூறு என்ற இலக்கியம் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றி, காதலைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது.
தமிழ் இலக்கியங்களில் உள்ளது அதனால் காதலிக்க வேண்டும் என்று பேச வரவில்லை. இலக்கியங்களில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனின் உணர்விலும் காதல் தோன்றியே தீரும். காதலை எதிர்ப்பவர்கள் வேண்டுமானால் அந்த உணர்வுக்கு காதல் என்ற பெயரை வைக்காமல் வேறு பெயரைக் கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் காதல் என்ற உணர்வுக்கு யாராலும் எதிர்வினையாற்ற முடியாது.
இன்று புத்தகங்கள், திரைப்படம் மற்றும் இணையதளத்தில் காதல் கருத்துக்கள் பல வழிகளில் வெளிப்படுகின்றது. ஆனால் உண்மையான காதல் உள்ளுணர்வோடு நாம் வைத்து பழகும்போது தான் அதை உணரமுடியும். சிலருக்கு காதல் செய்யும் போது, ஆரம்ப காலத்தைத் தவிர மற்ற நாட்களில் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயமும் இல்லாமல், ஃபோர் அடிப்பது போன்று உணர்வார்கள். சிலருக்கு அதனாலேயே காதல் தோல்வி அடைந்துவிடும்.
எனவே அந்த மாதிரி காதல் இல்லாமல், எப்போதுமே காதலுடன் (ரொமான்ஸாக) இருக்க சில வழிகள்:
1. காதல் என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அதிலும் காதல் சின்னங்களான ரோஜா, மெழுகுவர்த்திகள் மற்றும் சாக்லேட் மட்டுமே இதுவரை காதலில் ஒரு அறிகுறியை கொடுத்துள்ளது. உண்மையில் காதலிப்பவரை மகிழ்விப்பதற்கு, அவர்களின் காதல் உணர்வுகளைத் தூண்ட எது ஏதுவாயிருக்கும் என்று பாருங்கள். அவர்கள் எதை விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர்களின் காதலை வெல்ல அவர்களின் விருப்பங்கள், வெறுப்புகள் அறிந்து கொள்வது மிக அவசியம். மேலும் உங்களது உலகில் மற்றவரை விட அவர்கள் எத்தனை முக்கியமானவர் என்பதை நீங்கள் உணர ஆரம்பிக்கும் பொழுது, உங்கள் மனம் அவர் மீது அதிக கவனத்தை செலுத்தும். இவ்வாறு செலுத்தும் போது, அவர்களது ஒவ்வொரு செயலையும் ரசிக்கத் தோன்றும்.
2. நீங்கள் ஒருவர் மீது ஈர்ப்பு கொண்டு அந்த காதலை அவர்களிடம் வெளிப்படுத்த வேண்டும். மேலும் நீங்கள் அவர்களை கவர என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அவர்மீது ஆர்வம் கொண்டுள்ளீர் என்பதை எப்படி வெளிபடுத்துவது? அவர்களை அன்பால் வெல்ல என்ன செய்ய வேண்டும்? என்பதை யோசிக்க வேண்டியது அவசியம். அவர்களின் அன்பு மற்றும் காதலை பெற முயற்சிக்க வேண்டும். நீங்கள் முன்னமே காதல் தோல்வி அடைந்தவரானால், அந்த தோல்வியைக் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு அனுதாபத்தை உண்டாக்கலாம். அப்படி செய்கையில் ஒரு காட்சியை உருவாக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் எத்தனை ஆசை வைத்திருந்தீர்கள், காதலில் எத்தனை நம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்கும் போது, உங்கள் மீது காதல் கொள்ள வாய்ப்பு உள்ளது.
3. காதல் செய்யும் போது ஆரம்பத்தில் எல்லாம் புதியதாக இருக்கும். ஆரம்பத்தில் உங்கள் காதல், உற்சாகத்தை மற்றும் உத்வேகம் கொண்டு, நீண்ட நாள் உறவைத் தொடர நினைக்கும். நீங்கள் ஒருவரை சந்தித்து அவர் மீது காதல் கொண்டு, மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க மனம் ஏங்கும் மற்றும் உங்கள் தொடர்பு நீடிக்க - நாளை என்ன நடக்கும்? அடுத்த வாரம் என்ன நடக்கும்? அடுத்த மாதம் என்ன நடக்கும்? அவர் உங்களை அழைப்பாரா? முத்தமிடுவாரா? அவர் வருவாரா? என்று பல உணர்ச்சிகளும் எதிர்ப்பார்ப்பும் நிகழும். இந்த உறவு உங்கள் வாழ்வில் ஒப்புக்கொண்ட பின், இது ஒரு வழக்கமான ஒன்றாக மாறிவிடும். அதனால் உங்கள் காதல் எப்போதும் புதிதான ஒன்றாக இருக்க வேண்டும் எனில், ஏதாவது புதிதாக செய்யுங்கள். ஆச்சரியப்படும்படி, எதிர்பார்க்கும்படி, அவர்களை என்றும் உற்சாகபடுத்தும் படி, அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினால், உங்கள் காதல் எப்போதுமே சிறப்பாக இருக்கும்.
4. காதல் என்பது ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும் என்ற கட்டாயமோ அல்லது அது ஒன்றும் காசு கொடுத்து வாங்கும் விலை உயர்ந்த பொருளாகவோ அல்லது உயர்தரமானதாக இருக்க வேண்டும் என்பதோ இல்லை. உண்மையில், சில நேரங்களில், காதல் தருணங்கள் எளியதாகவும், மனதில் செய்ய வேண்டுமென்று தோன்றும் ஒரு உணர்வு. அதிலும் சில நேரங்களில் அந்த காதலை வெளிப்படுத்த "நான் உன்னை காதலிக்கிறேன்", "நான் உனது பிரிவால் வாடுகிறேன்" என்றெல்லாம் சொல்லி நம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். இல்லையெனில் அவர்களை மறைந்து நின்று பார்ப்பது, சத்தமாக காதலை சொல்வது, முத்தமிடுவது, கிண்டல் செய்வது, உணர்வை தொடும் வகையில் பேசுவது என்று காதலை வரம்பற்ற வழிகளில் வெளிப்படுத்தலாம். படைப்பாற்றல் மற்றும் வேடிக்கையாக செய்தல் மிகவும் அவர்களை ஈர்க்கும்!
5. வாழ்வில் நீங்கள் விரும்பியவரை பெருமைப்படுத்த அல்லது பாராட்ட, நீங்கள் உண்மையிலேயே அவர்களை உங்களோடு இருக்க செய்தல் வேண்டும். அவர்களை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ள, உங்களின் முழு முயற்சி எடுக்கும் பொழுது, அதில் அதிக சந்தோஷம் அடைவீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் அவர்களை தொடர்ந்து பார்க்கும் போது, அதைவிட அற்புதமான சுழல் எதுவும் இல்லை. அவரை உங்களது வாழ்க்கை துணையாக அடைந்து உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் பகிர்ந்து கொள்ள, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்பதை மனமானது ஞாபகப்படுத்தி, மீண்டும் உங்கள் வாழ்க்கையில் காதலை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இவையெல்லாம் சில அனுபவங்கள் தான். காதல் அனுபவிக்க வேண்டியது. போற்றப்பட வேண்டியது. வளர்க்கப்பட வேண்டியது. ஜாதி ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர, மனிதநேயம் தளைக்க ஜாதி கடந்த காதல் திருமணங்கள் தேவை