ஒற்றை வற்றல்

ஒற்றை வற்றல்
--------------------------
எழுந்து நடக்கும் தூரம்தான்
இருந்தும் அப்பத்தாளின்
கூனல் முதுகு
கொஞ்சம் கனத்திருக்கக் கூடும்

“இங்க வாத்தா
இருப்புச்சட்டியத் தாரியா…”

என்னை அழைத்துப் பெற்றுக்கொண்டாள்
எண்ணிப் பண்ணிரெண்டு
வற்றல்களை தகர டப்பாவிடமிருந்து
விடைபெறச்செய்து
எண்ணையூற்றி வறுத்தெடுத்து ...

“இந்தா ரெண்டமட்டும்
ஐயாவுக்குக் குடு
எண்ணப் பலகாரம் ஆகாது…”

பத்தை எண்ணிப்
பாவாடையில் மறைத்த நான்
முகப்புத்திண்ணையில்
ஐயாவிடம் இரண்டை நீட்டினேன்

“ஆத்தா… இந்தா
ஒண்ணக் கொண்டே
நொப்பத்தாட்ட குடு
எண்ண ஆகாதுன்னு
திங்காம இருப்பா... “

ஐயா திருப்பிக் கொடுத்த
ஒற்றை வற்றலைப்
பெற்றுக்கொண்டு
அப்பத்தாளைத்தேடி
அடுப்படிக்கு ஓடினேன்

அந்த இரண்டில் உப்பியிருந்தது
பாசமும் பக்தியுமெனில்
இந்த ஒன்றில் மேலும்
ஒட்டியிருந்தது காதல்
என்பதைப் புரிந்துகொள்ளும்
வயதில்லை எனக்கு ...

...மீ.மணிகண்டன்
#மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (27-Apr-17, 12:14 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
Tanglish : otrai vatral
பார்வை : 88

மேலே