கல்லாதார் சொற்தாற்றிச் சுனைத்தெழுதல் கூடாது - பழமொழி நானூறு 192

நேரிசை வெண்பா

கற்(று)ஆற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்தாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்(பு)ஊணி
யானையோடு ஆடல் உறவு. 192 - பழமொழி நானூறு

பொருளுரை:

நூல்களைக் கற்று அவைகளிற் கூறியபடி செயல்களைச் செய்வாரைக் கல்வி அறிவற்றவர்கள் கோபமூட்டும் வகையில் முறையற்ற சொற்களை வாரித் தூற்றி மன எழுச்சியால் அவரோடு மாறுகொண்டு முனைந்து எழுவது எத்தன்மையது என்றால் தானாக நடக்க முடியாத முடவன் ஊன்றுகோலை ஊன்றி யானையோடு விளையாட முயற்சிப்பதற்கு ஒப்பாகும்.

கருத்து:

கல்லார் கற்றாரோடு வாதம் செய்யின் அவமானம் அடைவர்.

விளக்கம்:

முடவன் உயிர் இழப்பான், கல்லார் அவமானம் அடைவர்.

தாற்றுதல் - முறையற்ற சொற்களை வாரித் தூற்றுதல், ‘தாற்றுதல்' என்பது தாத்தல் என வழக்கில் வழங்கிவருகிறது.

பிடிப்பு ஊணி - பற்றுக்கோடாக ஊன்றப்படுவது. (ஊன்றுகோல்) ஊன்றப்படுவது - ஊணி. இது வழக்கில் ஊணுதல் என்று வழங்கப்படுகிறது.

முடவன் பிடிப்பு ஊணி யானையோடு ஆடல் உறவு’- இஃது இச் செய்யுளிற் கண்ட பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-May-17, 11:27 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 95

மேலே