இருட்டின் வெளிச்சங்கள்

காலம் காலமாக
காசுக்கு விலை போவோம்
வெட்கத்தை கூறுபோட்டு
வேடிக்கைப் பார்ப்போம்!

அக்கம் பக்கம்
நொட்ட சொட்ட சொல்லி...
நாசுக்கா
நாலு குடும்பத்த கெடுப்போம்!

ஊர்ல இருக்குற
டீக்கடை பெஞ்சு தேய்ச்சு
எட்டு ஊர் பேச்சு
வாய் வலிக்க பேசுவோம்!

எம்புட்டு படிச்சாலும்
சாதிய சகதியில்
முக்குளித்து
மல்லுகட்டுவோம்!

வெறிநாய் போல
காமப் பசிக்கு
பச்ச குழந்தையைக் கூட
விட்டு வைக்க மாட்டோம்!

செத்த பொணத்துல கூட
காதுல கையில
இருக்கிறத சுருட்டி
அழகு பாப்போம்!

தாய்ப்பாலில் தண்ணிய
கலக்குவோம்...
அடுத்தவர் வேதனையில்
ஆனந்தம் அடைவோம்!

வரமுறை தெரியாம
வட்டி வாங்குவோம்...
வாய்க்கு வந்தபடி
புத்தர் போல பேசுவோம்!

பணத்துக்காக
எதையும் பண்ணுவோம்...
பாசத்தை குழியைத் தோண்டி
தடம் தெரியாம புதைச்சுடுவோம்!

பேரு வச்ச
பெத்தவங்களை...
காசு கட்டி
காப்பாகத்துல விட்டுபுடுவோம்!

கோயில் காசை
கொள்ளை அடிச்சு
நாங்கள்
கோபுரம் போல வாழ்த்திடுவோம்!

ஒரு சாண் உசிரு வாழ
ஓடாய் தேய்கிற
விவசாயிகளை நினைக்காம
வயிறு முட்ட சாப்பிடுவோம்!

ஏழைகள்
வயித்துல அடிச்சு...
சொகுசா
குளிர காய்ஞ்சுகிருவோம்!

இதுல
காவேரி விவகாரம்
இந்தி எதிர்ப்பு
இன அழிவு முழக்கம்
நீதி ஊர்வலம்
இன்னும் பல
போக்கேத்த போராட்டம்...

இப்படி
அரசியல் பண்ணி...
அடுக்கடுக்காய்
தலைமுறை தோறும்
தவறாமல் ஏமாற்றுவோம்!

வெட்கி தலை குனியுங்கள்...
தமிழுக்கும் தமிழர்களுக்கும்
எதிராக இருக்கும்
நீங்கள்...
அடுத்தவர்களைச் சொல்லி
என்ன பயன்???
வெளுத்துவிட்டது வேசம்
முடிந்துவிட்டது ஆவேசம்!

எழுதியவர் : செல்வம் ஜெ. (6-May-17, 10:28 am)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 331

மேலே