பனைப்பதித் துண்ணார் பழம் - பழமொழி நானூறு 68

ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

எனைப்பலவே யாயினும் சேய்த்தாற் பெறலின்
தினைத்துணையே யானும் அணிக்கோடல் நன்றே
இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப!
பனைப்பதித் துண்ணார் பழம். 68 - பழமொழி நானூறு

பொருளுரை:

ஒரே இனமாகிய ஆண் குரங்குகள் தேன் கூடுகளைக் கிழிக்கும் ஓங்கிய கற்கள் சூழ்ந்திருக்கின்ற மலைநாட்டை உடையவனே!

எத்துணைப் பலவேயாயினும் நெடுநாட்களுக்குப்பின் பெறுதலைவிட, தினையளவென்றலும் சில நாட்களுக்குள் கிடைப்பதைப் பெறுதல் நல்லது.

ஆதலால், பனம்பழத்தை நட்டுவைத்துப் பனை பழுத்தால் அப்பழத்தை உண்போம் என்றிருப்பார் யாருமில்லை.

கருத்து:
பயன் சிறியதேயாயினும் நிறையப் பெறவேண்டும் என்பதற்காகக் காத்திராமல், உடனே கிடைப்பதைப் பெற்றுப் பயனடைய வேண்டும்.

விளக்கம்:

சேய்த்து, அணி காலங்களை உணர்த்தி நின்றன.

பனம்பழம் ஒன்று கிடைக்குமானால் இதனை நட்டு வைத்து அது பழுத்த பின்னர் மிகுதியும் உண்போம் என்று கையிலுள்ள பழத்தை நட்டுவைத்து இழப்பார் யாருமிலர், பெற்ற அப்பொழுதே அதனை உண்பர்.

ஆகவே, நெடுங்காலத்தின் பின்வரும் பெரும்பயன் நோக்கி அண்மையில் கிடைத்த சிறுபயனை இழத்தல் கூடாது என்பதாயிற்று.

பயன் அளவு நோக்காது கால அளவு நோக்குக என்பதாம்.

பெரும்பயன் வரும்வரையில் உயிருடன் இருத்தல் அருமையாதலின், 'அணிக்கோடல் நன்று' என்றார்.

'பனைப் பதித் துண்ணார் பழம்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-May-17, 10:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே