காக்கைக்குக் காப்படுத்த சோறு – சிறுபஞ்ச மூலம் 39

நேரிசை வெண்பா

பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்
உண்டார் அடிசிலே தோழரிற் - கொண்டாராய்
யாக்கைக்குத் தக்க வறிவில்லார்க் காப்படுப்பிற்
காக்கைக்குக் காப்படுத்த சோறு. 39 – சிறுபஞ்ச மூலம்

பொருளுரை:

பொருட்காப்பிடத்திற்கும், பல கணக்குத் தொழிலுக்கும், பொருள்களைத் திருடுபோகாமற் காக்கும் மேற்பார்வைத் தொழிலுக்கும், இல்லக் கிழத்திகளின் காவலுக்கும், பலபேர் பங்கிட்டு உண்டு வயிறு நிறைகின்ற உணவின் காவலுக்கும் உடம்பு எடுத்ததற்கு தகுதியான மேலான அறிவில்லாதவர்களைத் தங்கள் நணபர்களைப்போல மனத்துட் கொண்டவர்களாய் காவற்றொழிலுக்கு ஏற்படுத்தினால் அவையெல்லாம் அவர்களிடத்து காகத்துக்கு தன் காவலில் சேர்ந்த சோற்றைப்போலக் காவலாலேயே களவுபோகும்.

கருத்துரை:

பொருள் சேரிடம் முதலியவற்றை அறிவில்லார் காக்கவிடின் அக்காவல் சோறு காத்தற் தொழிலைக் காகத்ததிற் கிட்டாற் போலும்.

பண்டாரம் - பொருள் சேரிடம், கருவூலம், கண்காணி - மேற்பார்வையாளர். இது கங்காணி என மருவியும் வழங்கும். கா – காவல், படுத்தல் - உண்டாக்குதல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-May-17, 9:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

மேலே