முத்தமிட்டேன் பெண்ணே முத்தமிட்டேன்

முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்..!
உன்னை என் கனவில் முத்தமிட்டேன்...
செம்மண்வெடிப்பினில்
குட்டி குதிரையை போலுள்ள பஞ்சுவிரலால்...
நிலத்தினை உழுது பயிர் செய்யும்
உன் பாதத்தினை பார்த்தும் பார்க்காமல்
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்..!

சந்தனம் பூசிய சறுக்கு மைதானத்தை
உன் இடையிலே வைத்து
மெல்லிய கொடி இடையாடினால்
இதயத்தை பொடியாக்கும்
இல்லாத உன் இடையில்
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்..!

மெழுகினை உருக்கி
மேலாடையாக அணிவித்து
கழுத்தினில் பாசிமணியினையிட்டு...
கவர்ந்திழுக்கும் காந்த கழுத்திற்கு
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்...

இளநெல் நாற்றுக்களை
இடைவிடாமல் இறுக்கிப்பிடித்து...
கதிரவனுக்குப் பகைவனைப் பூசி...
கண்ணாடியை மின்னிடச்செய்திடும் கருங்கூந்தலுக்கு
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்...

வைகையாற்றில் வெள்ளம் சென்றபின்...
வறண்ட நிலம் வெள்ளியை மேலாடையாக உடுத்தி...
மாலைவேளையில் கதிரவனுக்கு நண்பனாகி...
இரவினிலே தன் சுயரூபத்தை
கண்ணுக்கு அழகாக காட்டும் சந்திரனை...
பொட்டாக வைத்துள்ள நெற்றியில்
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்...

இமைகளா..? அல்லது இடிகளா..?
இமைக்கின்ற போது இதயத்தில் இடியிடிக்கிறது
இடிகளில் மின்சாரம் உள்ளதென்பதை... – உன்
இமைகளிருந்து வரும் மின்சார பார்வையால் புரியவைத்தாய்
அந்த மின்சார இமைகளுக்கு...
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்...

வெட்கத்தால் சிவந்து நிற்கும் கன்னத்தில்
பட்டும் படாமலும்...
தொட்டும் தொடாமலும்...
முத்தமிட்டேன் பெண்ணே..! முத்தமிட்டேன்...

இருப்பதோ இதயம் ஒன்று...
உன் இதழோ இரண்டு...
வெல்லம் விளையும் இதழ்களில்...
வெட்க மிகுதியால் கண்ணை மூடிக்கொண்டு
முத்தமிட முந்தினேன்...
என் முகத்திலே தண்ணிரை தெளித்த...
என் அம்மாவின் முகத்தினை பார்த்த பின்புதான்
இந்திரலோகத்தை விட்டு
இவ்வுலகத்திற்கு வந்தேன்..!

அவளை பார்வையால் முத்தமிட்டேன்..!
அவளோ பார்க்காமல் சென்றுவிட்டாள்.
வார்த்தையால் முத்தமிட்டேன்..! – அவளோ...
கையால் முத்தமிட்டால் என் கன்னத்தில்..!

நானோ..?
அவளை கனவில் முத்தமிட்டுகொண்டிருக்கிறேன்...
இன்று எனக்கு முத்தமிட்டால்...
இதழ்களால் அல்ல...
அவளுடைய அழகிய பாதத்தினை
பாதுகாக்கும் பாதசெருப்பால்...
கனவில் அல்ல நிஜத்தில்..!

************
சிகுவார
ஏப்ரல் 2000 ல் எழுதப்பட்டது.


Close (X)

10 (5)
  

மேலே