உழைப்புத் தருமே உயர்வு

நெற்றி வியர்வை நிலத்தில் வடிய உழைப்பவர்கள்
வெற்றிக் கனியை விரைவில் பறித்திடும் வேளைவரும்
கற்ற கலையும் கருணை யுடனே கரங்கொடுக்கும்
உற்ற துணையாய் உழைப்பே உலகில் உயர்த்திடுமே !

முயற்சி யுடனே முனைந்தால் எதையும் முடித்திடலாம்
அயரா உழைப்பே அரிய பலனை அளித்திடுமாம்
சுயமாய் உழைத்தால் துயரும் தொலைந்து சுமைகுறையும்
வியக்கும் படியாய் விடியல் மலர்ந்து விரிந்திடுமே !

தொடரும் வறுமையில் சோம்பிக் கிடந்தால் சுகம்வருமோ
இடரைக் களைய எழுச்சி யுடனே இனிதுழைத்தால்
நடக்கும் எவையும் நலமுடன் நாளும் நனிசிறக்கும்
உடலுக் குறுதி உழைப்பால் கிடைத்திடும் உண்மையிதே !

செய்யும் தொழிலினைத் தெய்வமாய்ப் போற்றச் சிறப்புறலாம்
பெய்யும் மழைபோல் பெருமை யுறலாம் பிறவியிலே
பொய்மை விடுத்துப் புவியில் உழைத்தால் புகழ்பெறலாம்
மெய்யும் சுகப்படும் மேன்மை யடைந்து மிளிர்ந்திடுமே !

உழைப்புத் தருமே உடல்நலக் காப்பினை உள்ளமட்டும்
உழைப்பால் உளத்தின் உவகைப் பெருக்கை உணர்ந்திடலாம்
உழைக்கும் கரத்தால் உறுதியைப் பெற்றே உயர்ந்திடலாம்
உழைப்பை விடுத்தே உழவர் மறுத்தால் உணவிலையே !

களத்தில் பணியைக் கருத்தாய்ப் புரிந்தால் களைப்பகலும்
உளத்தின் இருளும் உழைப்பால் விலகியே ஓடிவிடும்
வளமும் பெருகி வரமாய் மகிழ்ச்சி மனம்நிறைக்கும்
தளரா உழைப்புத் தருமே மதிப்பு தரணியிலே !
( கட்டளைக் கலித்துறை )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:27 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 1077

மேலே