பொய்கை அகவய லூரனைப் பூங்கட் புதல்வன் மிதித்துழக்க - ஐந்திணை எழுபது 47

(தலைமகளின் இல்லற வியல்பினைக் கண்டு மகிழ்ந்த செவிலி நற்றாய்க்கு உரைத்தது)

நேரிசை வெண்பா

தேங்கமழ் பொய்கை யகவய லூரனைப்
பூங்கட் புதல்வன் மிதித்துழக்க - ஈங்குத்
தளர்முலை பாராட்டி யென்னுடைய பாவை
வளர்முலைக் கண்ஞமுக்கு வார். 47 மருதம், ஐந்திணை எழுபது

பொருளுரை:

நறு மணமிக்க மலர்த் தடங்களையுடைய மருத நிலத்தேயுள்ள கழனி சூழ்ந்த ஊர்க்குத் தலைவனாகிய தலைமகனை அழகிய கண்களையுடைய மகன் கால்களால் துவைத்து சிதைத்துக் கொண்டிருக்க, இந் நிலையிலே, தலைமகனார் என் பாவை போல்பவளாகிய தலைமகளின் மகப் பெற்றமையால் நெகிழ்ந்துள்ள முலைகளை விரும்பி, முன்னோக்கி வளர்ந்து காணும்படியான அம் முலைகளின் நுனியினை கைகளால் நெருடி மகிழ்ச்சி யுறுவார் என்று செவிலி நற்றாயிடங் கூறினாள்.

விளக்கம்:

அகம் - மருதம். ஞமுக்குதல் - நமுக்குதல் - நெருடுதல்; ஞகர நகரப் போலி;
தலைமகளின் இல்வாழ்க்கைச் சிறப்பினை நேரிற் கண்ட செவிலி நற்றாய்க்குக் கூறியதாகும் இச்செய்யுள்.

கருத்தொரு மித்ததோர் காதலை மிக அழகாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.


  • எழுதியவர் : வ.க.கன்னியப்பன்
  • நாள் : 19-May-17, 1:16 pm
  • சேர்த்தது : Dr.V.K.Kanniappan
  • பார்வை : 21
Close (X)

0 (0)
  

மேலே