கண்ணகி கோட்டத்தில் சித்திரை மாதம்

தமிழர்களின் பெருமைக்குரிய வரலாற்று சின்னமான கண்ணகி கோவில், உரிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து வருகிறது.
மங்கலதேவி
பாண்டிய மன்னன் தன் கணவனை கொலை செய்த தகவல் அறிந்து ஆத்திரம் அடைந்த கண்ணகி, மதுரை மாநகரை எரித்து அழித்தார். அத்துடன் அவருடைய கோபம் தணியவில்லை. இதனால் வைகை ஆற்றின் தென்கரைப்பகுதியில் நடந்து 14–ம் நாளில் சேரநாட்டு எல்லையில் உள்ள விண்ணேத்திப்பாறை வந்தடைந்தாள். அங்கிருந்த குன்றக்குறவர்களிடம் தன்நிலை பற்றி கூறினாள்.

அப்போது தேவர்களுடன் பூப்பல்லக்கில் வந்த கோவலன், தலைவிரி கோலத்தில் கடும் துயரத்தில் இருந்த கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அமைதிப்படுத்தி விண்ணுலகம் அழைத்துச்சென்றான். கைம்பெண்ணாக வந்து நின்ற கண்ணகிக்கு கோவலன் மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற சிறப்புப்பெயர் பெற்றாள் என்றும், கண்ணகி வந்து நின்ற மலை மங்கலதேவி மலை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
கண்ணகி கோட்டம்
இந்நிகழ்வை நேரில் கண்டு வியப்புற்ற குன்றக்குறவர்கள் முல்லைப்பெரியாற்றங்கரையில், மலைவளம் காண வந்திருந்த சேரன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும், கேட்டதையும் கூறுகிறார்கள். இதுகுறித்த உண்மை நிலையை விசாரித்து அறிந்த சேரன் செங்குட்டுவன், சோழநாட்டில் பிறந்து, பாண்டிய நாட்டில் கணவனை பறிகொடுத்து, சேர நாட்டில் வந்து மீண்டும் கணவருடன்
விண்ணுலகம் சென்று கற்பை நிலைநாட்டிய கண்ணகிக்கு, அந்த இடத்தில் கோவில் எழுப்ப முடிவு செய்தான். அதற்காக இமயமலையில் இருந்து கல் கொண்டுவந்து கோவில் கட்டினான். அதுதான் கண்ணகி கோட்டம்.

இது தேனிமாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கூடலூருக்கு தெற்கே இருக்கும் வண்ணாத்திப்பாறை பகுதியாகும். தமிழக– கேரள எல்லைப்பகுதியான மங்கலதேவி மலையில் சுமார் 4 ஆயிரத்து 830 அடி உயரத்தில் கண்ணகி கோட்டம் உள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இக்கோவில் பின்னாளில் சிதிலமடைந்தது.
வழக்குப்பதிவு செய்தனர்
அப்போது சோழப்பேரரசன் முதலாம் ராஜராஜன் ஆட்சிகாலத்தில் (கி.பி.985–1014) கோவிலை சோழர்களின் சிற்பக்கலை வண்ணத்தில் சீர்படுத்தினான். இத்தனை சிறப்பும், சரித்திர பின்னணியும் உள்ள கண்ணகி கோட்டத்தில் சித்திரை மாதம் வரும் பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெறும். ஆனால் அதில் தமிழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கேரள அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கூடலூரில் இருந்து பளியன்குடி வனப்பாதை வழியாக கண்ணகி கோவிலுக்குச் சென்று வழிபட நமக்கு நடைபாதை வசதி இருந்துள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு சென்று திரும்ப அன்றைய வனத்துறை அனுமதி ஓலையையும் வழங்கி உள்ளது.

ஆனால் கடந்த 1982–ல் தமிழக வனப்பகுதியான பளியன்குடி வழியாக கண்ணகி கோவிலுக்குச் சென்றவர்களை, மரம் வெட்டவும், வேட்டையாடவும் வந்த கும்பல் என்று கேரள வனத்துறையினர் பிடித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அது பொய் வழக்கு என்று தெரியவந்த நிலையில், அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அனுமதி வழங்க வேண்டும்
தொடர்ந்து 1983–ல் கண்ணகி கோவிலில் துர்க்கை சிலையை வைத்து, இது துர்க்கை கோவில் என்ற புது குழப்பத்தை ஏற்படுத்தியது கேரள அரசு. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்புவரை, இக்கோட்டத்தில் ஒருவாரம் வரை மக்கள் தங்கியிருந்து கொண்டாடிய சித்திரை முழுநிலவு விழா, காலப்போக்கில் 3 நாட்களாக மாறியது.

அதன்பின் கேரள வனத்துறையின் கெடுபிடியால் தற்போது ஒருநாள் விழாவாக மாறியுள்ளது. இந்தநிலையில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 22–ந் தேதி கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா நடைபெற உள்ளது. ஆனால் தற்போது கண்ணகி கோட்டம் உரிய பராமரிப்பு இல்லாமல் சிதிலம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.

அதனை சீரமைக்கும் பணிகளில் கேரள அரசு ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். ஆனால் இவற்றை செய்யாமல் தமிழ்நாட்டின் கற்புக்கரசியான கண்ணகியின் கோட்டத்தை கேரள அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

எழுதியவர் : (19-May-17, 5:06 pm)
பார்வை : 42

மேலே