சிந்தனைக் கருவறையில் இருவேறு கருக்கள் - சந்தோஷ்

1 )

நான் புகைப்படக் கலைஞன் அல்ல.
எப்போதோ ஒரு முறை
உன்னை படம் எடுத்துக்காட்டியிருந்தேன்.
என் விரல் கிளிக்கில்
நீ அதுவரை இல்லாத அழகியானதாக
என் காதோரம்
காதலூற சொன்னாய்
ஞாபகமிருக்கிறதா மெர்சி ?
அன்று நான் அளவில்லாத
ஆனந்தம் அடைந்தேன்.
உலகின் சிறந்த புகைப்படக் கவிஞனாய்
வானத்தின் கூரையை
என் தலைக்கணத்தில் இடித்தேன்.
நீ சிரித்தாய்..
மறுநாள் நீ மறுத்தாய்
உன் ஜாதி தகப்பனின்
வலியுறுத்தலில்
நான் காதலன் அல்ல
என்றாய் கண்ணீரோடு.
அந்தக் கண்ணீர்த் துளிகளை
இருதயத்தில் படமெடுத்து வைத்திருக்கிறேன்.
இன்னும் அது அழியவில்லை.
இன்னும் அது கரையவில்லை.
நம் காதலைப் போல..
நான் புகைப்படக் கலைஞன் அல்ல.
ஆனாலும்
பிடித்ததை பத்திரப்படுத்திக்கொள்ளும்
சிறந்த கலைஞன்.. !

---------

2 )என்னிடமிருந்தது கடைசி பத்து ரூபாய்.
மீதமிருந்தது செல்லாத ரூபாய் தாள்கள்.
ஆம். அப்போது பணம்
மதிப்பிழக்க வைக்கப்பட்ட கொடுங்காலம்.
அப்போதுதான் நானும் கொடும் பசியோடு
சாலையோர தேனீர் கடையில்
தேநீரின் முதல் துளியை
பருக முயன்றேன்.
"சார் பசிக்குது காசு கொடுங்க சார். " புதிதாக பிச்சையெடுக்க
பழகிய சிறுவனின் குரல்.
அந்தக் குரல்..
அந்த கொடுமைக் குரல்
பொதுவுடமை தடியெடுத்து
என் பின்னந்தலையில் ஒங்கியடித்தது.
ஆனாலும் இங்கே...
வழங்கவேண்டியவன் எனக்கும்.
வாங்கக் கூடிய அச்சிறுவனுக்கும்..
அந்த நேரத்தில்
ஒரே பிரச்சினை .. பசி...!
பசி என்னளவில் உணர்வு
பசி அச்சிறுவனுக்கு கொடுமை
..ம்ம்ம் பொதுவுடைமை
உணர்வுகள் சரியாக இல்லையெனில்
கொடுமைகள் நிகழத்தானேச் செய்யும்.
" தம்பி டீ குடிப்பா! "
" இல்ல சார் காசு .....? "
தேநீர் 10 ரூபாய் அல்ல. 8 ரூபாய் தான்.
2 ரூபாய் தானம் போக
8 ரூபாய் தேனீரை அச்சிறுவனோடு
பகிர்ந்து அருந்தியப் போது
கார்ல் மார்க்ஸ் ஆன்மா மகிழ்ந்திருக்குமென
நம்பிக் கொண்டிருக்கிறேன்.

**
-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (20-May-17, 2:12 am)
பார்வை : 117

மேலே