கோடைமழை தந்திடும் சுகம்

​​கோடையின் தாக்கத்திலும்
வாடையும் வஞ்சிப்பதாலும்
ஓடைகள் வற்றியதாலும்
ஏரிக்குளங்கள் ஆக்கிரமிப்பாலும்
களவுபோனது நீர்நிலைகளும் ....

ஆற்றுமணலை திருடுவதும்
காற்றுவெளி கட்டிடமாவதும்
நாற்றங்கால் நடைபாதையாவதும்
வயல்வெளிகள் சமவெளியாவதும்
மறைந்துபோனது விவசாயமும் ...

உழல்கிறான் உழவனின்று
சுழல்கிறான் வறுமைப்பிடியில்
நிழல்தேடும் வழிப்போக்கனாய்
பாதையிலா பாதையிலின்று
சதையிலாக்கூடாய் பயணிக்கிறான் ....

வெட்டிசாய்த்த மரங்களுமிங்கு
கட்டியழுகிறது கல்லறையில் ..
நகைக்கிறான் நட்டவனும்
நடுவானில் நமைப்பார்த்து
நட்டமும் நமக்கென்பதாலே...

நட்டுவைத்தவன் மறக்கப்பட்டு
வெட்டியவன் பெயர் பொறிக்கப்பட்டு
எழுந்து நிற்கிறது மாளிகைகள் ... ...

அசாதாரண அரசியல் சூழலில்
அன்னநடை போடுது அரசாங்கம்
அணிகளாய் பிரிந்து நிற்குது
நாளுக்கொருப் பேச்சாய் பேசுது
நாடும் நானிலமும் சிரிக்குது ...

கோடைமழை தந்திடும் சுகம்
பாடைகட்டும் தகிக்கும் அனலுக்கு ...
கொதிக்கும் மனங்களும் குளிரும்
கொட்டங்கள் அடங்கும் அதிரடியாய்
கோட்டையில் காட்சிகள் மாறினால் ....?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (20-May-17, 9:14 am)
பார்வை : 315

மேலே