அந்தி மங்கை தந்த விடியல்

பகலவன் பரிகால்கள் ஓய்ந்திட
பார்வை துறந்தாள் அந்தி மங்கை
பௌர்ணமி நிலவுடன் கூடி மகிழ்ந்தாள்
வெண்பனி மலர்கள் சுகந்தம் சூழ்ந்தது

செவியை உந்தி உணர்வாக்கி
மௌனவிரதத்தில் மையல் கொண்டாள்
அரவமின்றி உறங்கிய அந்துப்பூச்சிகள்
ஆவிசுபிக்க ஆயசம்பேசி ஆர்ப்பரித்தன

இருளைப் பூசிய இரவு நங்கை
கருமையின் அழகை பாரிடை சாற்றினாள்
நித்திரை எனும் மந்திரப் பொடியை
இத்திரை உறங்க உகந்து தூவினாள்

மரண ஒத்திகையாய் உயிர்கள்
சயனமஞ்சத்தில் நயனம் கொண்டன
கள்ளராய் திரியும் கோட்டானும் நரியும்
அங்கும் இங்கும் அலறி கதித்தன

வெள்ளன கண்டு வெள்ளி பதுங்கின
பள்ளி கொண்ட இரவுத் தாரகை
துள்ளி குதித்து கீழ்வானம் அடைந்தாள்
அள்ளி ஒளியை ஆசைதீர பருகினாள்

வெண் ஒளியில் மேனி தகிக்க
விடியலாய் நகர்வலம் நடந்தாள்
காலச் சுவட்டில் இன்னொருநாளாய்
பூவுலகை கடத்திச் சென்றாள்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (24-May-17, 11:55 am)
பார்வை : 76

மேலே