ஆளுக்கொரு நீதி

மேனி அழகில் எந்த விதத்திலும்
காதல் பறவைகளுக்கு
குறைவில்லாத அது
நேற்றும் கூட்டோரம்
வந்திருந்தது..

வழமைக்கு மாறான
காதல் பறவைகளின்
கூக்குரல் கேட்டவளாய் கூட்டை
எட்டிப்பர்த்த தர்ம பத்தினி
கூக்குரலிட்டாள்

சென்று பார்த்ததில்
கூட்டின் சல்லடைக் கம்பிகளுக்குள்
நுழைவதற்கான பிரயத்தனத்துடன்
போராடிக்கொண்டிருந்தது
அந்த சாரை.

எப்போதும் வந்துபோகும்
அதனிடமிருந்து
காதல் பறவைகளின் முட்டைகளை
காக்கும் முனைப்போடு
குப்பியில் நிறைத்த மண்ணெண்ணெய்
விசிரலில் துண்டைக் காணோம்
துணியைக்காணோம் என்று
வந்த வழி ஓடிமறைந்த அது
மீண்டும் வருவதற்கான சாத்தியமில்லை

காதல் பறவை முட்டைகளைக்
காப்பாற்றிய கையோடு கைகழுவி
சாப்பிட உட்கார்ந்தேன் .
என் சாப்பாட்டில் முட்டை பொரியல்..

வெளியே கொக்கரித்துக்கொண்டிருந்த
பெட்டைக்கோழி இப்போது
என் மீது மண்ணெண்ணெய் தெளிக்கவில்லை.
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (31-May-17, 4:56 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : aalukkoru neethi
பார்வை : 90

மேலே