கவிக்கோ நினைவுகள்---- கவி வளநாடன்

" அது பெரிய அரங்கமுமில்லை, சிறியதெனவும் சொல்லிவிட முடியாது.அவர் மேடையேறும்போது அரங்கு நிறைந்திருந்தது கூட்டம் .
ஏதாவது சினிமாக் கலைஞர்கள் வருகிறார்கள், வந்தார்களென்றால் மட்டுமே கூடக்கூடிய கூட்டம் கவிக்கோவின் கவியரங்க நிகழ்ச்சிக்குக் கூடியிருந்ததுகண்டு எங்களுக்கும், அவருக்குமே மகிழ்ச்சி.
நிகழ்ச்சி தொடங்கியது .
கவியரங்க தலைவரை அழைத்து அமர்த்தியபின், அரங்கில்
கவிதை பாடவேண்டியவர்கள் பெயரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் வரிசைப்படி அழைத்தார்.
முதலில் "இவ்வரங்கில் கவிதை பாட புலவர் ...அவரை அன்புடன் அழைக்கிறேன் " என்று ஒரு பெயரைச் சொன்னார்.
அய்யோ.! என நான் ஆடிப்போய்விட்டேன். அவர் புலவரில்லையே? என்று. அடுத்து ஒவ்வொரு பெயரையும் தொகுப்பாளர் அழைக்கும்போதெல்லாம் அதைப் புரிந்துகொண்ட கவிக்கோ நகைத்தார்.அந் நகைப்பின் பொருள் எனக்குப் புரிந்தது. மேடையேறி கவிக்கோவின் அருகிலிருந்த இருக்கையில் நானும் அமர்ந்ததும் கவிக்கோ புன்னகைத்துக்கொண்டே "நீங்கள் புலவரென எனக்குத் தெரியாதே " என்றார்.
அய்யா நான் புலவரில்லை, கவிஞர் என்பதைத்தான் புலவர், புலவரென்கிறார் அவர்.
என்றதும்.
அதற்குத்தான் நானும் சிரித்தேன். என்றவர் தன் தலைமையுரையில்
"இத்தனை புலவர்கள் கவியரங்கக் கவிதைபாட ஒரு சாதாரணக் கவிஞன் நான் தலைமை ஏற்பது இந்த அரங்கில்தான் " என்றாரே பார்க்கலாம். தொகுத்து வழங்கியவர் முதல் அவரைத் தொகுத்து வழங்க அழைத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்வரை எல்லாரின் முகத்திலும் ஏகப்பட்ட வழிசல்.

குழந்தை மனமும்,அவரின் மனம்போல் வெளுத்த குறுந்தாடியும், புன்னகைக்கக்கூட இதழ்களைக் கணக்காக திறக்கும் கண்ணியமும், அண்ணன் வைரமுத்து சொன்னதுபோல "கவிஞர்களின் கவிஞன் நீ " என்றது முற்றிலும் உண்மை. அந்த மாபெரும் கவிஞரின் தலைமையில் நானும் கவிதை பாடியுள்ளேன் என்பது நான் பெற்ற பாக்கியம்.
கவிக்கோவுக்கு என் கண்ணீர் அஞ்சலி

எழுதியவர் : (3-Jun-17, 2:27 am)
பார்வை : 100

மேலே