தேடுகிறேன் தொலைந்த காதலை

நாலு சுவர்களின் நடுவில் இருந்தும்
நமக்குள் தொலைந்து போன
நம் காதலை தேடுகிறேன்

நானும் நீயும் எதிர் எதிர் இருந்தும்
நமக்குள் கரைந்து போன
என் கனவுகளை நாடுகிறேன்

என்னை பார்த்து பேசாமலே பேசிய
உன் கண்களை தேடுகிறேன்

காலை காபி தரும் போது
காதல் கலந்து நீ திருப்பி தரும்
காலை முத்தத்தை நாடுகிறேன்

தினசரி நாளிதழை படிக்கும் முன்
தினமும் என்னை நேசமாய் படிக்கும்
உன் விழிகளை தேடுகிறேன்

ஐயோ என்று அலுவலகம் செல்ல
அலம்பல் செய்த பொய்யான நடிப்புகளை தேடுகிறேன்

அன்று அடிக்கடி
அழகு என்றாய்
என்னையும் ரசிக்க ஆரம்பிதேன்
தேவதை என்றாய்
தேவதையாகவே இருந்தேன் இந்த இல்லத்தில்
டார்லிங் என்றாய்
நான் டார்ஜிலிங் போனதாய் உணர்ந்தேன்

இன்று
நீ காபி என்கிறாய்
நான் நேசமாய் நீட்டி பேச தொடங்குமுன்
கணினியில் மூடிக்கொள்கிறாய் உன்னை

நீ சாப்பாடு என்று கேட்கிறாய்
நான் உன்னோடு பகிர துடிக்க
நீ தொலைக்காட்சிக்குள் ஒளிந்து கொள்கிறாய்

அலுவலகம் முடிந்து
திரும்பி வருகிறாய் நீ
வீட்டிற்கு பேசினாயா என்பது
வழக்கமான கேள்வியானது உனக்கு
உன்னிடம் பேச எத்தனையோ
இருக்கு எனக்கு
நீயோ உன் புது காதலியை
கையிலேந்தி கொள்கிறாய்

உன் விழிகள் ஸ்மார்ட் போனை பார்த்தபடி
உன் விரல்கள் மெசேஜ் செய்தபடி
நான் உன்னை காதலோடு பார்த்தபடி

எழுதியவர் : நாஞ்சில் யாழினி (10-Jun-17, 12:50 am)
பார்வை : 167

மேலே