நகைச்சுவைத் தொடர் ----வாஷிங்டனில் திருமணம்---முன்னுரை---
இருபத்திரண்டு வருடங்களுக்கு முன், நானும் நண்பர்கள் சிலரும் திருவையாற்றில் நடைபெற்ற தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம். காவிரிப் படித்துறையில் இறங்கி ஸ்நானம் செய்து கொண்டிருந்த போது, நாலைந்து வெள்ளைக்காரர்கள் தண்ணீரில் முகம் கழுவிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.
தென்னையும் வாழையும் மண்டிய காவிரிக் கரைச் சூழ்நிலையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும் விபூதி பூசிய ரசிகர்களுக்கும் இடையே அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருத்தம் இல்லாதவர்களாகக் காணப்பட்டனர். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
"என்ன பார்க்கிறீர்கள்?" என்று கேட்டனர் நண்பர்கள்.
"இந்த இடத்தில் இவர்களைக் காணும் போது விசித்திரமாக இருக்கிறது?" என்றேன்.
"நம்முடைய கர்னாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது!" என்றார் நண்பர்களில் ஒருவர்.
"ஒரு வருடம் தியாகய்யர் உற்சவத்தை வெளிநாட்டிலேயே கொண்டு போய் நடத்தினால் எப்படி இருக்கும்?" என்றேன்.
"ரொம்ப வேடிக்கையாகத் தான் இருக்கும். அதுவும் இந்த மாதிரி ஒரு நதிக்கரையில் நடத்த வேண்டும். அங்கே தியாகய்யருக்கு ஒரு கோயில் கட்டி, அந்தச் சந்நிதியில் அந்த நாட்டவர்களுடன் நாமும் சேர்ந்து உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்!" என்றனர் நண்பர்கள்.
அவ்வளவுதான்; வெறும் வாயை மெல்லும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு அவல் ஒன்று கிடைத்தால் போதாதா? அதிலிருந்து எனது கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலைந்தது. என்னென்னவோ எண்ணங்களெல்லாம் உருவெடுக்கத் தொடங்கின. முழு நீள நகைச்சுவைத் தொடர் ஒன்று எழுத வேண்டும் என்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்ட எனது லட்சியம், கடைசியாகக் காரியத்தில் நிறைவேறும் காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்த போது உள்ளம் உற்சாகத்தில் மிதந்தது.
அடுத்த கணமே, காவிரிக் கரை, கர்னாடக சங்கீதம் எல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டன. தொலைவில் ஷேக் சின்ன மௌலானாவின் நாகஸ்வர இசை ஒலிக்கிறது. அந்த ஒலியே என் கற்பனைக்குப் பின்னணியாகவும் அமைகிறது. மறு நிமிடமே மானசீகமாக வெளிநாடுகளுக்குப் பறக்கிறேன். நான் போகும் இடங்களுக்கு எல்லாம் அந்த நாகஸ்வர இசையும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
சிறுகதைகள் எழுதலாம்; தொடர் கதைகள் எழுதலாம். நகைச்சுவை பொருந்திய சிறு சிறு கதைகளும், கட்டுரைகளும் கூட எழுதலாம். பல பேர் எழுதியிருக்கிறார்கள்; எழுதி வெற்றியும் கண்டிருக்கிறார்கள். ஆனால், நகைச்சுவையுடன் கூடிய நீண்ட தொடர் கதைகளோ, தொடர் கட்டுரைகளோ எழுதுவது அவ்வளவு எளிதல்ல. தமிழில், கல்கியும், எஸ்.வி.வி.யும் எழுதினார்கள். அவர்களுக்குப் பின்னர் நகைச்சுவையுடன் எழுதுபவர்கள் அரிதாகிவிட்டார்கள்.
முழு நீள நகைச்சுவைத் தொடர்கதை ஒன்று எழுத வேண்டுமென்ற ஆசை வெகுகாலமாக என் உள்ளத்தில் இருந்து வந்தது. அதற்கு உரிய திறமையும், காலமும் வர வேண்டாமா?
'எதைப் பற்றி எழுதுவது... எப்படி எழுதுவது...' என்ற கவலையிலேயே காலம் போய்க் கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் தான் வால்ட் டிஸ்னி தயாரித்த 'ஆப்ஸெண்ட் மைண்டட் புரொஃபஸர்' என்னும் ஆங்கிலப் படம் சென்னைக்கு வந்தது. அந்த முழு நீள நகைச்சுவைப் படத்தை இரு முறை கண்டு களித்தேன். படம் முழுவதும் சிரித்து ரசிக்கும்படியாக அந்தப் படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று யோசித்தேன். விஷயம் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. ஒரு புரொஃபஸர், தம்முடைய விஞ்ஞானத் திறமையால் 'ஃப்ளப்பர்' (Flubber) என்னும் பறக்கும் ரப்பரை கண்டுபிடிக்கிறார். அடுத்தபடியாக, அதை வைத்துக் கொண்டு பறக்கும் மோட்டார் தயாராகிறது. பின்னர், அதற்கு வேண்டிய பல சம்பவங்களைப் புகுத்தி, நகைச்சுவை நிகழ்ச்சிகளாக்கிப் பார்ப்போரைப் பைத்தியமாக அடித்து விடுகிறார். நடக்காத ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் கூறி, அதில் தம்முடைய கற்பனையை எப்படியெல்லாம் ஓடவிட்டிருக்கிறார்!
'தமிழிலும் இப்படி மிகைப்படுத்திக் கூறக்கூடிய நகைச்சுவைக் கதை ஒன்று எழுத முடியுமா? இம்மாதிரி அதற்கு ஒரு வித்து கிடைக்குமா?' என்ற ஏக்கம் உண்டாயிற்று. எனது ஏக்கம் வீண் போகவில்லை; அந்த வித்து திருவையாற்றில் கிடைத்தது!
'நம் ஊர்க் கல்யாணம் ஒன்றை வெளிநாட்டில் நடத்தினால், அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பார்கள்?' திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைத்த வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில் நமது கல்யாணத்தை நடத்துகிற போது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது. அந்த எண்ணம் தான் வாஷிங்டனில் திருமணத்துக்கு வித்தாக அமைந்தது.
நமது கல்யாணத்தில் உள்ள விஷயங்களை ஒன்று விடாமல் நுணுக்கமாக கவனித்துக் கட்டுரைகளாக எழுதினால் அதுவே மிகசு சுவையுள்ள ஒரு கட்டுரைத் தொடராக அமையும். அப்படியிருக்க நம்முடைய கல்யாணமே அமெரிக்காவில் நடப்பதாகக் கற்பனை செய்தபோது அதில் பல வேடிக்கைகளுக்கும், 'தமாஷ்'களுக்கும் இடமிருப்பதாக ஊகிக்க முடிந்தது.
திருவையாற்றிலிருந்து திரும்பி வருகிற போது இதே சிந்தனைதான். நமது நாட்டில் ஒரு கல்யாணத்தை நடத்தி முடிப்பதென்றாலே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது. ஜாதகப் பொருத்தம், பண விவகாரம், சம்பந்திச் சண்டை போன்ற எத்தனையோ விஷயங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அமெரிக்காவுக்குப் போய் ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டுமே என்று நினைத்த போது ஒரு பெரும் கவலை என்னைக் கவ்விக் கொண்டது. உண்மையாகவே கல்யாணம் செய்யப் போகிறவர்களுக்குக் கூட அவ்வளவு கவலை இருந்திருக்காது!
இந்த நகைச்சுவைத் தொடர் 'ஆனந்த விகட'னில் பதினோரு வாரங்கள் வெளியாயிற்று. வாசகர்கள் இதற்கு அளித்த வரவேற்பு பற்றிச் சொல்லத் தேவையில்லை.
இந்தக் கதையின் வெற்றிக்குப் பாதிக் காரணம் திரு.கோபுலுவின் சித்திரங்கள் தான். உயிருள்ள அவருடைய சித்திரங்கள் வாசகர்களை வாஷிங்டன் நகருக்கே அழைத்துச் சென்று எனது கற்பனைக்கெல்லாம் நிஜ உருவம் தந்து, நேருக்கு நேர் காண்பது போன்ற பிரமையை ஏற்படுத்தித் தந்தன. அவருக்கு எனது நன்றி!
சாவி