காதல் கொலை

காதல் கொலை
பாவலர் கருமலைத்தமிழாழன்

இதயங்கள் ஒன்றாக இணையும் போழ்தில்
இல்லாத சாதிக்கே என்ன வேலை
மதங்களினைப் பார்த்துமனம் கலப்ப தில்லை
மாளிகையை பணம்பார்த்தும் கலப்ப தில்லை
இதமான இளந்தென்றல் வருடல் போன்றே
இதயங்கள் வருடுவதால் பிறக்கும் காதல்
பதமாகப் பூவிதழில் அமரும் வண்டாய்ப்
பார்வைகளின் சங்கமத்தில் தோன்றும் காதல் !

அரசர்கள் நாடுதனை ஆண்ட போதும்
அழகான காதல்கொலை நடந்த தன்று
வரகவியாம் அம்பிகா பதியைக் கொன்று
வழங்கியது அநீதியை அதிகா ரந்தான்
வரலாற்றில் எத்தனையோ உண்மைக் காதல்
வளராமல் உயிர்களினைப் பறிக்கக் கண்டோம்
மரபாக இன்றுமது நடக்கப் பார்த்தும்
மறித்ததனை எதிர்ப்பதற்குத் துணிவோ இல்லை !

உயர்சாதி எனத்தம்மை நினைத்துக் கொண்டே
உருவான தம்மகளின் காதல் மாய்க்க
வயல்களையை எடுத்தல்போல் காத லித்த
வாலிபனின் உயிர்தன்னைப் பறிக்கின் றார்கள்
கயவராகிப் பேருந்து நிலையம் முன்பும்
கண்ணூறு பார்த்துநிற்கக் கோயில் முன்பும்
தயங்காமல் சாதிவெறி ஆண வத்தால்
தலைகொய்து காதல்கொலை செய்கின் றார்கள் ! ( 1 )

ஒருதலையின் காதலாலும் ; பெற்றோர் நெஞ்சில்
ஓங்கியுள்ள சாதிமத வெறியி னாலும்
அரும்உயிர்கள் பலியாகிப் போகு தின்று
அரிவாளே மன்மதனின் கணையா யிற்று
மருந்தாக மனிதத்தை ஊட்டி நாமும்
மாயசாதி மனநோயை ஓட்டு வோமே
அரும்பண்பு ஒழுக்கத்தைச் சமுதா யத்தின்
அடிவேராய் வளர்த்துகொலை தடுப்போம் வாரீர் ! ( 2 )

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Jun-17, 8:26 pm)
பார்வை : 82

மேலே