சட்டம்

சட்டம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

சட்டமொரு இருட்டறையாம் வழக்கு ரைஞர்
சாற்றுமொழி ஒளியேற்றும் நீதிக் கென்று
கட்டுரைத்த அறிஞர்தம் சொற்க ளெல்லாம்
கனவாகிப் போனதின்று நீதி மன்றில்
திட்டமிட்டுக் கொலைகளினை செய்வ தற்கும்
திருடுதற்கும் சிக்காமல் இருப்ப தற்கும்
சட்டத்தைப் படித்தவரே வழிகள் கூறிச்
சட்டத்தை ஏமாற்றிக் கொழிக்கின் றார்கள் !

செவியாலே வாதங்கள் கேட்டு நீதி
செப்புதற்கே கண்களினைக் கட்டி வைக்க
நவில்வோர்கள் நீதித்தாய் குருடென் றெண்ணி
நடிக்கின்றார் பொய்தன்னை உண்மை யாக்க !
குவிந்திருக்கும் அதிகார ஆட்சி யாலே
குனிந்துசட்டம் பணியுமாறு வளைக்கின் றார்கள்
குவிந்திருக்கும் கரும்பணத்தின் துணிவி னாலே
குரல்வளையை வளைத்தூமை ஆக்கு கின்றார் !

செல்வாக்கு பணமிருப்போர் கால்கள் சுற்றிச்
செல்லநாய்போல் சட்டந்தான் வாலை ஆட்டும்
செல்வமில்லா ஏழையரைக் குரைத்துப் பாய்ந்து
செவ்வாயால் கடித்தவரைத் துரத்தி ஓட்டும்
நல்லபடி ஆட்சிநாடு நடக்க வேண்டி
நல்லறிஞர் அம்பேத்கார் போன்றோர் தந்த
வெல்லமெனம் சட்டத்தை ஈக்கள் மொய்த்து
வெம்நஞ்சாய் மாற்றிடாமல் காப்போம் வாரீர் !

எழுதியவர் : பாவலர் கருமலைத்தமிழாழன் (13-Jun-17, 8:29 pm)
பார்வை : 52

மேலே